Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆனி மாத பவுர்ணமி வழிபாடு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு: ஆனி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் பிரசித்தி பெற்ற சிவத்தலமாக விளங்குகிறது. இந்த மலை சித்தர்கள் வாழும் மலையாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆடி மற்றும் தை அமாவாசை நாட்கள் முக்கிய விஷேச நாட்களாக கருதப்படுகிறது. இந்த சமயங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர்.

முன்பு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மொத்தம் 8 நாள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது தினசரி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனி மாத பவுர்ணமி தினமான இன்று காலை மலையடிவாரத்தில் கோயிலுக்குச் செல்லும் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். காலை 6 மணியளவில் வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர்.

முன்னதாக வனத்துறை ஊழியர்கள் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து, ‘அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக் கூடாது, இரவில் கோயிலில் தங்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தினர். பவுர்ணமியை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சந்தனம், பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதன்பின் சர்வ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்காக ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர், நிர்வாக அதிகாரி ஆகியோர் செய்திருந்தனர்.