Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியா முன்னேறுகிறது: தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

தூத்துக்குடி: தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியா முன்னேறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இதுதான் வெற்றி திருநாள். நான்கு நாட்கள் அயல்நாடு சுற்றுப்பயணத்தின் போது இந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதான் இந்தியாவின் நம்பிக்கை. அடையாளம்.

தூத்துக்குடியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. இந்த முனையத்தால் தூத்துக்குடியின் தொழில், வியாபாரம், சுற்றுலா போன்றவற்றிற்கு புதிய ஆற்றல் கிடைக்கும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வெளிப்புற சரக்கு முனையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. செப்டம்பர் மாதம் சரக்கு பெட்டி முனையத்தை நான் நாட்டிற்கு அர்ப்பணித்தேன்.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் துறைமுக திட்டங்கள் மூலம் உட்கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளது. எந்த வொரு மாநிலத்திற்கும் உட்கட்டமைப்பும் எரிசக்தியும் முதன்மையாகும். நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தூத்துக்குடியில் பிரபலமான முத்துக்களை பரிசாக அளித்தது நினைவிருக்கிறது. பாண்டி நாட்டு முத்துக்கள், தமிழ்நாட்டின் பொருளாதார வல்லமையின் அடையாளமாக இருந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டுடன் செய்து கொண்டு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு பிரிட்டனின் எந்த பொருளுக்கும் வரி விதிக்கப்படாது. விலை மலிவாக இருக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகமாகும். நமது இளைஞர்களின் ஸ்டார்ட் அப் மிகுந்த ஆதாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆபரேஷன் சிந்தூதரில் இந்தியாவின் பலத்தை பார்த்து இருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டின் ஆற்றல் உட்கட்டமைப்பை ஒன்றிய அரசு நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளும். வளர்ச்சியடைந்த தமிழ்நாடு, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நிலையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

* ‘நோ பண்ட், நோ என்ட்ரி மோடி’ கோவையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டுக்கு முறைப்படி கொடுக்க வேண்டிய கல்வி நிதியை கொடுக்க மறுத்துவிட்டு, தமிழகத்துக்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் இன்ஜினியர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.

இதில், பங்கேற்றவர்கள் பிரதமர் மோடி தமிழகம் வருகையை கண்டித்து கோஷம் எழுப்பினர். ‘நோ பண்ட், நோ என்ட்ரி மோடி’ எனவும் கோஷம் எழுப்பினர். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், தற்போது வரை கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. மாணவர்களின் கல்வியை கெடுத்துவிட்டு, பிரதமருக்கு தமிழகத்தில் என்ன வேலை? பிரதமர் மோடி வருகை, தமிழ்நாட்டிற்கு பெரும் அவமானம் என்றும் முழக்கமிட்டனர்.