Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடனை திருப்பி கொடுக்காததால் பட்டப்பகலில் தொழிலதிபர் காரில் குண்டுகட்டாக கடத்தல்: 10 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

பூந்தமல்லி: வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் பட்டப்பகலில் தொழிலதிபர், காரில் குண்டுகட்டாக கடத்தப்பட்டார். இது தொடர்பாக 10 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன் (30). இவர், மதுரவாயலில் வசித்து வரும் உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சாப்பிட்டனர். பின்னர் வெளியே வந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் காரில் தயாராக நின்றிருந்தது. திடீரென பாய்ந்து சென்று, ஹர்ஷவர்த்தனை அலேக்காக காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். இதை பார்த்ததும் மீனாட்சி சுந்தரம் அதிர்ச்சியடைந்தார். அந்த கும்பலை தடுக்க முயன்றபோது, கடுமையாக எச்சரிக்கை விடுத்ததுடன் ‘போலீசுக்கு தகவல் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம்’ என்று மிரட்டி விட்டு சென்றனர்.

இருப்பினும் இதுகுறித்து மதுரவாயல் போலீசில் மீனாட்சி சுந்தரம் புகார் செய்தார். அதில், ‘எனது அக்கா மகன் ஹர்ஷவர்த்தனை 10 பேர் கும்பல் காரில் கடத்தி சென்று விட்டது. அப்போது, போலீசிடம் கூறினால் கொலை செய்து விடுவோம்’ என மிரட்டினர் என்று கூறியிருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், ‘ஹர்ஷவர்த்தன், அவரது சொந்த ஊரில் சுயமாக தொழில் செய்து வந்துள்ளார். மேலும் ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்துள்ளார். சொந்த தொழிலிலும், ஷேர் மார்க்கெட்டிலும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். அதற்கு பிறகும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

அதனால் மதுரவாயலில் உள்ள அவரது தாய்மாமா மீனாட்சி சுந்தரம் வீட்டில் வந்து தங்கியுள்ளார். ஓட்டலில் நேற்று சாப்பிட வந்த போது திருநெல்வேலியை சேர்ந்த ரகு மற்றும் 9 பேர் சேர்ந்து ஹர்ஷவர்த்தனை காரில் கடத்தி சென்றுள்ளனர். ஹர்ஷவர்த்தன் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத ஆத்திரத்தில் இந்த சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டதுடன் மீனாட்சி சுந்தரத்தையும் மிரட்டி விட்டு சென்றது’ தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதுடன் ஹர்ஷவர்த்தனை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.