Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூண்டி-புழல் நீர்த்தேக்க இணைப்பு கால்வாய் கரைகள் சரிந்து சேதம்

* ஓராண்டாக தண்ணீர் வீணாகும் அவலம்

* நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர்: புல்லரம்பாக்கம், ஈக்காடு, தண்ணீர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டி-புழல் நீர்த்தேக்க இணைப்பு கால்வாய் கரைகள் சேதமாகியுள்ளதால் ஓராண்டாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து கிருஷ்ணா நீர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பெருமாநகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில் முக்கிய நீர்தேக்கமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் இருந்து வருகிறது. இந்த நீர்த்தேக்கம் 8,458 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1940ம் ஆண்டு முதல் 1944ம் ஆண்டு வரை கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983ம் ஆண்டு கிருஷ்ணா நதிநீர் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும்.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஆந்திர முதல்வராக இருந்த என்டிஆர் ஆகியோர் கிருஷ்ணா நதிநீர் பெற ஒப்பந்தம் செய்தனர். இதற்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வரை 152 கிமீ தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. அங்கிருந்து பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் அமைந்துள்ள 25 கிமீ தூரத்திற்கு கால்வாய் அமைக்க 13 ஆண்டுகள் ஆனது. குடிநீர் வழங்கும் நீர் ஆண்டாக ஜூலை முதல் ஜூன் வரையிலான கணக்கின் படி 2 தவணைகளாக குடிநீர் திறப்பது என ஒப்பந்தமானது. அதன்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீர்த்தேக்கங்களைச் சுற்றி உள்ள வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் நீர்த்தேக்கத்திற்கு வந்து சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மழை அதிகளவில் பெய்யும்போது சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அதிகளவில் நீர் வந்து சேருகிறது. அதேபோல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் மற்றும் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் பூண்டி நீர்த்தேக்கத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அதனால் பூண்டி நீர்த்தேக்கம் விரைவில் நிரம்பி விடுகிறது. இதனால் சென்னை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இங்கிருந்து நீர் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் புழல் ஏரிக்குச் செல்லும் இணைப்பு கால்வாய் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து புல்லரம்பாக்கம், ஈக்காடு, தண்ணீர்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு, இணைப்பு கால்வாய் கரைப்பகுதி மிகுந்த சேதமடைந்துள்ளது. சேதமாகி ஓராண்டாகியும் கிருஷ்ணா கால்வாய் துறையினர் இதனை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் மண் அரிப்பால் சேதமான கால்வாய் கரையை, கிருஷ்ணா கால்வாய் துறையினர் சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக கரைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரை அமைந்துள்ள பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.