Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் கொடுக்கன்பாளையம் பகுதியில் தரிசு நிலங்களில் காலணி ஆலையை அமைக்க வேண்டாம்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கடலூர் கொடுக்கன்பாளையம் பகுதியில் தரிசு நிலங்களில் காலணி ஆலையை அமைக்க வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடலூரை அடுத்த கொடுக்கன்பாளையத்தில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளையும், அவர்கள் வளர்த்த முந்திரி மரங்களையும் அகற்றி விட்டு, தோல் அல்லாத காலனி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. கடலூர் மாவட்டம் கொடுக்கன்பாளையம். பெத்தாங்குப்பம். மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முந்திரி சாகுபடி செய்து வாழ்ந்து வந்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் காவல்துறை உதவியுடன் அந்த நிலங்களில் இருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்; அங்கு வளர்க்கப்பட்டிருந்த முந்திரி மரங்களில் பெரும்பாலானவை பிடுங்கி எறியப்பட்டன.

அப்போதே, தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காகவே பொதுமக்கள் வெளியேற்றப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வந்தது. இப்போது அந்த நிலங்கள் காலனி தொழிற்சாலை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு உண்மையாகியிருக்கிறது. கொடுக்கன்பாளையம். பெத்தாங்குப்பம். மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்களில் அங்குள்ள மக்கள் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றில் தீர்ப்பு வராத நிலையில், அங்குள்ள நிலங்களை தனியாருக்கு தாரைவார்க்க முயல்வது நியாயமல்ல.

கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. தமிழக அரசு நினைத்தால் அந்த இடங்களை காலனி தொழிற்சாலை அமைக்க ஒதுக்கலாம். அதை விடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலங்களைப் பறித்து தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்க முயல்வது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். கொடுக்கன்பாளையம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் காலனி தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அந்தப் பகுதியில் தலைமுறை தலைமுறைகளாக முந்திரி சாகுபடி செய்து வரும் மக்களுக்கு அங்குள்ள நிலங்களை பட்டா செய்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.