Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தகண்ணபுரம் சந்தையில் ரூ.10 கோடிக்கு மாடுகள் விற்பனை

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே புகழ்பெற்ற கண்ணபுரம் மாட்டுச்சந்தையில் ரூ.10 கோடி வரை காங்கயம் மாடு, காளை, எருதுகள், பூச்சி காளைகள், கன்றுகள் விற்பனையானது. வெள்ளக்கோவில் அடுத்துள்ள ஓலப்பபாளையம் அருகே கண்ணபுரம் விக்கிரம சோழீஸ்வரர் கோயில் சித்தரா பவுர்ணமி தேரோட்டம் வரும் 23ம் தேதியும், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா 25ம் தேதியும் நடைபெற உள்ளது.

பத்தாம் நுற்றாண்டில் (1088) அபிமான சோழ ராஜாதிராஜனால் விக்கிரம சோழீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு, வீர ராஜேந்திர சோழனால் இக்கோயிலுக்கு கொடை வழங்கப்பட்டும், உழவர்கள், வணிகர்களுக்கு வரி விதிக்கப்பட்டு விக்கிரம சோழீஸ்வரர் கோயில் தைப்பூச விழாவும், தினப்பூசைகளும், இதர திருவிழாவும் நடந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலில் உள்ள முருக கடவுள் ஆறு முகங்களுடன்‌ காட்சி தருவது சிறப்பாகும்.

மேலும் சேரர்களின் முசிறி (கேரளா) துறைமுகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் இராசகேசரி பெருவழிப் பாதையில் அமைந்துள்ள இக்கோயிலும் ஆண்டு தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையும் 1100 ஆண்டுகள் பழமையானதாகும்.  இந்த ஆண்டு கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட காங்கயம் இன காளைகள், பசுமாடுகள், கன்றுகள், எருதுகள், பூச்சி காளைகள் விற்பனைக்கு வந்திருந்தது.

காங்கயம் இன நாட்டு மாடுகளுக்கு என கடந்த 1100 ஆண்டுகளாக நடைபெறும் ஒரே சந்தை என்பதால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, தஞ்சை, கடலூர் மாவட்டங்களிலிருந்தும் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும் பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட வட மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர்.

இங்கு 6 மாத இளங் கன்றுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், நாட்டு பசு மாடுகள் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும், சோடி காளைகள் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரையும், இன விருத்திக் காளைகள் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரையும் விற்பனையானது. தற்போது, காங்கயம் இன மாடுகளின் முக்கியத்துவம், காங்கயம் இன மாட்டின் பாலில் உள்ள மருத்துவ குணங்கள் என விழிப்புணர்வு மக்கள் மனதில் எழுந்த பின்னர் படிப்படியாக மாடு வளர்ப்போரின் பார்வை காங்கயம் இன மாடுகளின் மேல் விழத் தொடங்கியது.

விற்பனைக்கு வந்திருந்த 5000 மாடுகளில் சுமார் 2500 மாடுகள் வரை விற்பனை ஆனது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 கோடி வரை இருக்கும்.  கண்ணபுரம் சந்தையில் இந்த ஆண்டு ரூ.10 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றிருப்பது விவசாயிகள், வியாபாரிகளிடையே மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகளை வெள்ளக்கோவில் யூனியன் நிர்வாகம் தரப்பில் செய்திருந்தனர்.