Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்டுகளை தாமதமில்லாமல் செயல்படுத்த நடவடிக்கை: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்டுகளை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்டை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 699 வழக்குகள் பிடிவாரன்ட் நிலையில் நிலுவையில் உள்ளன.

இதில், 1985ம் ஆண்டு வழக்குகளும் உள்ளன. 1985 முதல் 2024 வரை 61 ஆயிரத்து 301 வழக்குகளில் பிடிவாரன்ட் அமல்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், 61 ஆயிரம் வழக்குகளில் பல ஆண்டுகளாக பிடிவாரன்டை அமல்படுத்தாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது நீதிபரிபாலன முறையை பலவீனப்படுத்தி விடும். எதிர்காலத்தில் பிடிவாரன்ட்டுகளை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிவாரன்ட்டுகளை அமல்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும், உயர் நீதிமன்ற சுற்றறிக்கைகளையும், காவல் துறையினரும், நீதித்துறையினரும் பின்பற்றாவிட்டால், அது நீதித்துறையின் மாண்பையும், மரியாதையையும் மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையையும் குலைத்து விடும்.

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்களை தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்து வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். அவர்களை நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொள்ளச் செய்யும் வகையில் சொத்துகளை முடக்குவது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதை ஊக்குவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பிடிவாரன்ட்டுகளை செயல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், உயர் நீதிமன்ற சுற்றறிக்கைகள் அமல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மகேஷ் பாபுவை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கிறேன். மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆய்வு செய்து ஒருங்கிணைப்பு அதிகாரி அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதேபோல, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை கோப்புக்கு எடுக்கக் கோரிய வழக்கில், காவல் துறையினர் தாக்கல் செய்யும் குற்ற பத்திரிகைகளை தாமதமின்றி ஆய்வு செய்து கோப்பு எடுக்க வேண்டும்.. தீர்வு தேடி நீதிமன்ற கதவுகளை தட்டும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நடைமுறை குளறுபடிகளால் அவர்களுக்கு நீதி மறுக்கப்படவோ, தாமதப்படவோ கூடாது என்று உத்தரவிட்டார்.