ஈரோடு: கள்ளக்காதலனை கொலை செய்த வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சோனு என்கிற ராஜ் (27). இவர் ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையத்தில் உள்ள பிளீச்சிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி சோனு ஒரு பெண் மற்றும் 2 வயது பெண் குழந்தையை தான் தங்கியிருந்த அறைக்கு அழைத்து வந்தார். மறுநாள் அறையில் இருந்து சோனு நீண்டநேரமாகியும் வெளிவரவில்லை. அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் அறையை திறந்து பார்த்தபோது ரத்தம் உறைந்த நிலையில் சோனு சடலமாக கிடந்தார்.
இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், சோனுவுடன் வந்த பெண் உ.பி.யை சேர்ந்த ஆர்த்தி (29) என்பதும், இவருக்கும் சோனுவுக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. ஆர்த்தியை சோனு ஈரோடு அழைத்து வந்துள்ளார். கள்ளக்காதல் விவகாரம் ஆர்த்தியின் கணவர் தேவதாஸ் சர்வானுக்கு (35) தெரியவந்தது.
இதை அடுத்து ஈரோடு வந்த அவர் சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து சோனுவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு 2வது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தேவதாஸ் சர்வான், ஆர்த்தி தம்பதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வி.சுரேஷ் தீர்ப்பு கூறினார்.