புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம், டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோது, இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினருக்குத் தங்குமிடம் அளித்ததாக 70 இந்தியர்கள் மீது டெல்லி காவல்துறை 16 வழக்குகளைப் பதிவு செய்தது. ஊரடங்கு உத்தரவை மீறியதாகவும், நோய் பரவலுக்குக் காரணமாக இருந்ததாகவும் இந்திய தண்டனைச் சட்டம் 188, 269 மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி குற்றம்சாட்டப்பட்ட 70 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், தாங்கள் மதக் கூட்டங்களை நடத்தவில்லை என்றும், மனிதாபிமான அடிப்படையில் வெளிநாட்டினருக்குத் தங்குமிடம் மட்டுமே வழங்கியதாகவும், ஒன்றிய அரசு உத்தரவுகள் கூட்டங்களுக்குத் மட்டுமே தடை விதித்திருந்தது என்றும் வாதிட்டனர்.
மேலும், தங்களுக்கு கொரோனா தொற்று இருந்ததற்கான எந்த ஆதாரமும் முதல் தகவல் அறிக்கையிலோ அல்லது குற்றப்பத்திரிக்கையிலோ இல்லை என்றும், எனவே நோய் பரப்பியதாகக் குற்றம்சாட்டுவது மிகைப்படுத்தப்பட்டது என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, 70 இந்தியர்கள் மீதான 16 வழக்குகளையும், குற்றப்பத்திரிக்கைகளையும் முழுமையாக ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.