Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காப்பர் மீதான 50% இறக்குமதி வரி ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: காப்பர் மீதான 50% இறக்குமதி வரி ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக 2வது முறை பொறுப்பேற்றது முதல் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை முன்வைத்து பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரிவிதிக்க போவதாக அறிவித்தார். இந்தியாவுக்கு 100 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று அறிவித்த டிரம்ப் பின்னர் அதை 26 சதவீத வாரியாக குறைத்து ஜூலை 9வரை ஒத்திவைத்திருந்தார். அதற்கான கெடு நேற்று நிறைவடைந்த நிலையில் ஜூலை 31ம் தேதி வரை கெடுவை நீட்டித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை, ஈராக் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவிகிதம் வரை கூடுதல் வரிவிதித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இலங்கை, ஈராக், லிபியா, அல்ஜீரியா ஆகியவற்றிற்கு 30 சதவீத வரியும், மால்டோவா,பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு 25 சதவீத வரியும், புருனேவுக்கு 20 சத வீத வரியும் விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இனியும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் இந்த புதிய வரிவிதிப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வெறும் என்றும் அதிபர் டிரம்ப் தனது ட்டுரூத் சோசியல் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பு மதிப்பீட்டை தீவிரமாகப் பெற்ற பிறகு, ஆகஸ்ட் 1, 2025 முதல் தாமிரத்திற்கு 50% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கிறேன். செமிகண்டக்டர்கள், விமானங்கள், கப்பல்கள், வெடிமருந்துகள், தரவு மையங்கள், லித்தியம்-அயன் பேட்டரிகள், ரேடார் அமைப்புகள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் போன்றவற்றுக்கு தாமிரம் அவசியம், அவற்றில் பலவற்றை நாங்கள் உருவாக்கி வருகிறோம். பாதுகாப்புத் துறையால் தாமிரம் இரண்டாவது அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொருளாகும்! நமது முட்டாள்தனமான (மற்றும் தூக்கம்!) "தலைவர்கள்" இந்த முக்கியமான தொழிலை ஏன் அழித்தார்கள்? இந்த 50% வரிவிதிப்பு பைடன் நிர்வாகத்தின் சிந்தனையற்ற நடத்தையையும் முட்டாள்தனத்தையும் மாற்றியமைக்கும்.

அமெரிக்கா மீண்டும் ஒரு மேலாதிக்க தாமிரத் தொழிலை உருவாக்கும். இது, எல்லாவற்றிற்கும் மேலாக, நமது பொற்காலம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்தார். ஜப்பான், தென்கொரியா, வங்கதேசம் உட்பட 14 நாடுகளுக்கு ஏற்கனவே 40 சதவீதம்வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளான நாடுகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. பெரும் பொருளாதார சுனாமியை சந்தித்து மெல்ல மீண்டெழுந்து வரும் இலங்கைக்கு 30 சதவீத வரி என்பது அந்நாட்டின் பொருளாதார தன்மையை மீண்டும் நிலைகுலைய செய்யும் என கருதப்படுகிறது.

இதனிடையே பிரிக்ஸ் நாடுகளின் 17வது உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் கடந்த 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடந்த போது டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானதால் அந்த கூட்டமைப்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் இணைந்து உண்டாக்கிய கூட்டமைப்பில் தற்போது ஈரான், எகிப்து, இந்தோனேஷியா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எத்தியோப்பியா நாடுகளும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.