Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடரும் யானை அட்டகாசம்; புறநகர் பகுதி பொதுமக்கள் பீதி: வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு

தொண்டாமுத்தூர்: கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மருதமலை, ஓணாப்பாளையம், தாளியூர், கெம்பனூர், வண்டிக்காரனூர், குப்பேபாளையம், விராலியூர், ஆலாந்துறை, கணுவாய், தடாகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த ஒரு மாதமாக காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாகவும், குட்டிகளுடனும் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றன. முன்பெல்லாம் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னங்குருத்து, பாக்கு, அரசாணிக்காய், தக்காளி, சோளக்கதிர் போன்றவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வந்தன.

தற்போது விளை நிலங்களை சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால் காட்டுயானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து குடியிருப்புகள் நிறைந்த வீதிகளுக்குள் உலா வருகின்றன. வீடுகளை சுற்றி வளர்க்கப்பட்டு வந்த வாழை, பாக்கு, தென்னைகளை தின்று, வேரோடு பிடுங்கியும் நாசம் செய்து வந்த நிலையில், தற்போது ரேஷன் கடையில் உள்ள அரிசிகளை குறி வைத்து நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

காட்டு யானை வருகையை தெரு நாய்கள் கண்டுபிடித்து குரைப்பதால் பொதுமக்கள் எழுந்து வந்து யானைகளை மீண்டும் வனப்பகுதி நோக்கி விரட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றனர். குறிப்பாக ஊருக்குள் புகுந்த யானைகள் குறித்த தகவல்களை வனத்துறைக்கு தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வரும்மாறு அழைப்பு விடுக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டு யானை ஒன்று தொண்டாமுத்தூர் மெயின் பகுதியில் உள்ள வீட்டின் கேட்டை உடைத்ததோடு, காம்பவுண்ட் சுவரையும் இடித்து தள்ளியபடி மறுபுறம் சென்றது.

மேலும் அங்குள்ள ரேஷன் கடை நோக்கி சென்றபோது, யானை ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்கள் யானையை விரட்ட முயன்றனர். அரசு கலை கல்லூரி வழியாக யானை ஓட்டம் பிடித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கெம்பனூரில் தோட்டத்து சாளையில் வைத்திருந்த கால்நடை தீவனங்களாகிய தவிடு, புண்ணாக்கு போன்றவற்றை ஒற்றையானை தின்று தீர்த்தது. அவ்வப்போது இரை தேடி காட்டு யானைகள் ஊருக்கு புகுந்து விடுவதால் நள்ளிரவில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு தனியே வெளியே வர வேண்டாம் என்றும், மாலை 6 மணி முதல் அதிகாலை வரை வாகன ஓட்டிகள் பேரூர்- சிறுவாணி சாலையில் தனியாக செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வனத்துறை அமைச்சரிடம் மனு: கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி. சென்னையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சமீப காலமாக காட்டுயானைகள் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் இரை தேடி வந்த யானைகள் தற்போது மனித-விலங்கு மோதலை அதிகரிக்கும் வகையில் மூர்க்கத்தனமாக நடந்து வருகின்றது. கடந்த ஒரு மாதங்களுக்குள் 3 பேர் யானை தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேல் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எனவே வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதோடு, வன எல்லையோர கிராமங்களை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.