Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

30 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த கல்லூரிகளுக்கான ஏ++, ஏ+, ஏ தரநிலைக்கு மூடுவிழா: தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அதிரடி

புதுடெல்லி: உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகார முறையில் இனிமேல் நேரில் சென்று ஆய்வு செய்யும் முறைக்கு பதிலாக, ஆன்லைன் முறை ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதனால் 30 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) தனது நிபுணர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்யும் முறையை கடந்த 30 ஆண்டுகளாக பின்பற்றி வந்தது.

ஆய்வின் முடிவில், ஏ++, ஏ+, ஏ போன்ற ஏழு தரநிலைகள் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், இந்த நேரில் ஆய்வு செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது என்றும், ஊழலுக்கு வழிவகுப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள 40% பல்கலைக்கழகங்கள் மற்றும் 18% கல்லூரிகள் மட்டுமே இதுவரை அங்கீகாரம் பெற்றிருந்தன. இந்தப் பிரச்னைகளைக் களைய, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒன்றிய கல்வி அமைச்சகம் உயர்மட்டக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தற்போது முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட புதிய அங்கீகார முறை வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, ஏழு அடுக்கு தரநிலைகளுக்குப் பதிலாக, இனிமேல் ‘அங்கீகாரம் பெற்றது’ அல்லது ‘அங்கீகாரம் பெறாதது’ என இரண்டே நிலைகள் மட்டுமே இருக்கும்.

அடிப்படை அங்கீகாரத்திற்கு நிபுணர் குழு நேரில் சென்று ஆய்வு செய்யும் முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு, ஆவணங்கள் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஆன்லைன் சரிபார்ப்பு முறை மட்டுமே பின்பற்றப்படும். இதுகுறித்து தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுதே கூறுகையில், ‘தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்த சீர்திருத்தத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை அங்கீகார வரம்பிற்குள் கொண்டுவரப்படும்’ என்றார். ஒன்றிய கல்வி அமைச்சகம் கொண்டு வந்துள்ள புதிய சீர்திருத்தத்தில், அடிப்படை அங்கீகாரம் மற்றும் முதிர்ச்சி அடிப்படையிலான தர அங்கீகாரம் என இரண்டு அடுக்கு மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அடிப்படை அங்கீகாரத்தில், பல்கலைக்கழகங்களுக்கு 55, தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு 50, இணைப்புக் கல்லூரிகளுக்கு 40 அளவுருக்களின் அடிப்படையில் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.

இதில் தேர்ச்சி பெறும் நிறுவனங்கள், அடுத்தகட்டமான ஐந்து நிலைகளைக் கொண்ட ‘முதிர்ச்சி அடிப்படையிலான தர அங்கீகாரத்திற்கு’ விண்ணப்பிக்கத் தகுதி பெறும். ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், தொழில் அதிபர்கள் என 100 பேர் கொண்ட குழுவிடம் ஆன்லைன் மூலம் கருத்துகள் கேட்கப்படும். தவறான தகவல்களை அளிக்கும் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம். முதிர்ச்சி அடிப்படையிலான அங்கீகாரத்தின் உயர் நிலைகளில் (நிலை 3, 4, 5) மட்டுமே நிபுணர் குழுவின் நேரடி ஆய்வு, அதுவும் ஆன்லைன் மற்றும் நேரடி ஆய்வு கலந்த கலப்பின முறையில் நடத்தப்படும். இந்தியாவில் கல்வி நிறுவனங்களை அமைத்துள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்த அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.