Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் மனித-விலங்கு மோதலை தடுக்கும் அதிநவீன ஏஐ தொழில் நுட்பம்: கிராம மக்கள் நிம்மதி

மேட்டுப்பாளையம்: கோவை அருகே அதிநவீன ஏஐ தொழில் நுட்பத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, வெள்ளியங்காடு, கெம்மாராம்பாளையம், காளம்பாளையம, தோலம்பாளையம், ஓடந்துறை, சிறுமுகை, இருளர்பதி பழங்குடியின கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குள் வாழ்கின்றன. இந்த விலங்குகள் உணவு, குடிநீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால் பயிர் சேதத்தை தவிர மனித- விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்து விடுகிறது. வனத்துறையினரும் அகழி, மின்வேலி, இரவு பகல் கண்காணிப்பு பணிளை மேற்கொண்டு மனித- விலங்கு மோதல் தடுத்து வருகிறார்கள். இருந்தாலும் சில நேரங்களில் துரதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது.

இந்நிலையில், அதிநவீன தொழில்நுட்பமான ஏஐ (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி காரமடை அடுத்துள்ள கெம்மராம்பாளையத்தில் வனவிலங்குகளை எளிதில் விரட்டி பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க காரமடை அடுத்துள்ள கெம்மராம்பாளையம் ஊராட்சியில் வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பமான ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அரை கி.மீ தொலைவிற்கு வனவிலங்குகளின் ஊடுருவலை தடுத்து சாதித்துள்ளனர்.இந்த புதிய தொழில்நுட்பம் என்பது வனவிலங்கு நடமாடும் இடத்தை கண்டறிந்து அங்கு கேமரா, ஒலிபெருக்கி பொருத்தப்படுகிறது. இவைகளை ஏஐ தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ மானிட்டரில் இணைக்கப்படுகிறது. அங்கிருந்து வனத்துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு சிக்னல் கொடுக்கும் வகையில் இணைக்கப்படுகிறது. அதன்படி 400 மீட்டர் தொலைவில் வனவிலங்கு நடமாடினால் கேமிரா மூலம் ஏஐ தொழில்நுட்ப கருவிக்கு சிக்னல் அனுப்புகிறது.

அங்கிருந்து வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சைரன், மனிதர்கள் சப்தமிடும் முறை, ஜேசிபி இயந்திரம் இயங்கும் சப்தம் உள்ளிட்ட பல்வேறு சப்தங்களை தானாகவே ஒலியாக வெளியிடுகிறது. அவ்வாறு வெளியிடப்படும் சத்தத்தை கேட்டு வனவிலங்குகள் சற்று நேரம் நின்று கவனித்த பின்னர் அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புகின்றன. இந்த சோதனை முயற்சியின் பயனாக கடந்த சில மாதங்களில் ஓரிரு முறை மட்டுமே வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேற முயற்சித்துள்ளன. பின்னர், ஒலிபெருக்கியில் வெளியிடப்படும் சத்தங்களை கேட்டவுடன் அங்கிருந்து வனப்பகுதிக்கு திரும்பியுள்ளன. இதனால், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி தற்போது வெற்றி அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.