கோவை: கோவையில் 1998-ல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். கோவையில் 1998-ல் பிப்.14, 17ம் தேதிகளில், 19 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில், 58 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்துள்ளனர். இதைத் தவிர, 24 இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு, செயலிழக்கம் செய்யப்பட்டன. அதில் அல் - உம்மா தலைவர்களான எஸ்.ஏ.பாட்ஷா, முகமது அன்சாரி உள்ளிட்டோர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் 156 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 16 பேர் இன்னும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பத்தப்பட்ட முக்கிய குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம் ஜெய்பூரில் தலைமறைவாக இருந்து வந்த டெய்லர் ராஜா என்று அழைக்கப்படக்கூடிய சாதிக் ராஜாவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் கைது நடவடிக்கை குறித்து மாநகர போலீசாரை உஷார் நிலையில் இருக்க மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டது. கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்த பின்பு விரிவான செய்தி அறிக்கையை வெளியிட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
