சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம், அனைத்து வரிகளும் சேர்த்து, ரூ.200க்கு மேல் இருக்கக்கூடாது: கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூரு: கர்நாடகாவில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு ரூ.200 மட்டும் என கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட ஆணையில்; "அனைத்து மொழிப் படங்களுக்கான, மல்டிபிளக்ஸ் உள்ளிட் அனைத்து விதமான தியேட்டர்களும் பொழுதுபோக்கு வரி உட்பட ரூ.200க்கு மிகாமல் கட்டணத்தை வைக்க வேண்டும். இது குறித்த ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
கர்நாடகாவில் பெங்களூரூ உள்ளிட்ட மாநகரங்களில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் மற்ற மாநிலங்களை விட அதிகம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வார நாட்களில் ஒரு கட்டணம், வார இறுதி நாட்களில் இன்னும் அதிகமான கட்டணம் என்ற முறையில் வசூலிக்கப்படுகிறது. ஐமாக்ஸ், 4டிஎக்ஸ் தியேட்டர்களில் ரூ.600 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
2017ம் ஆண்டு முதல்வர் சித்தராமையா இது போன்ற உத்தரவை பிறப்பித்தார். அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இருந்தாலும் அவர்கள் தாங்களாக நிர்ணயித்த கட்டணங்களையே வசூலித்து வந்தனர். இதனிடையே, 2021ம் ஆண்டு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அந்த விதிகளில் சில திருத்தங்களைச் செய்து தற்போது புதிய உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.