Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘‘2026க்கு பிறகு சினிமாவுக்கு சென்றுவிடுவார் விஜய்’’ பல்டி பழனிசாமி தினமும் ஏதேதோ பேசுகிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம்

பெரம்பூர்: சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டுவரும் சமுதாய நலக்கூடம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டுவரும் திருவிக. நகர், பெரியார் நகர் புதிய பேருந்து நிலையம், சேத்துப்பட்டில் கட்டப்படும் நவீன சலவைக் கூடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது மேயர் பிரியா, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி துணை ஆணையர் கௌஷிக் இருந்தனர்.

இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆட்சியில் துவங்கப்பட்டாலும் அடிப்படை வசதிகளை கணக்கிடாமல் இருந்தது. ஆனால் தற்போது அடிப்படை வசதிகள் கணக்கிடப்பட்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. செங்கல்பட்டில் மிகப்பெரிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. மகாபலிபுரத்தில் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.

ஆவடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெரியார் நகர், திரு.வி.க.நகர் ஆகிய பேருந்து நிலையத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் முதல்வர் திறந்து வைக்கிறார். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் ரயில் நிலையப்பணிகளை விரைவுப்படுத்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் எங்கள் செயலாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ரயில் நிலையத்துக்கு உண்டான தொகை 20 கோடி ரூபாயை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. அந்த பணி விரைவு படுத்தப்பட்டு செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

திமுக கூட்டணியை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘’நாங்கள் யாரையாவது கூட்டணிக்கு வா, வா என்று அழைக்கிறோமா? இல்லை. அவர்களது கூட்டணியில் உள்ள யாரையாவது விமர்சனம் செய்கிறோமா? எடப்பாடி மைக்கை பிடித்தாலே கம்யூனிஸ்ட்களை விமர்சனம் செய்வது, விசிகவை வா என்று சொல்வது என்று தேடித்தேடி அழைத்துக் கொண்டிருக்கிறார்.

புலிக்குப் பயந்தவன்தான் தன் மேல் படுத்துக்கொள் தன் மேல் படுத்துக்கொள் என்று கூறுவான். பல்டி பழனிசாமி தினமும் ஒன்று பேசிக்கொண்டிருக்கிறார். இந்த கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. இந்த கூட்டணியை தலைமை தாங்கும் முதல்வரை கூட்டணி கட்சிகள் நம்புகின்றன. மக்கள் நலப்பணியில் ஒன்றியத்தில் முதன்மையாக இருக்கிறார் முதலமைச்சர். 2026ம் ஆண்டு மீண்டும் கிரீடத்தைச் சூட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

1967, 77 போன்று 2026ல் மாற்றம் வரும் என்ற விஜயின் பேச்சு குறித்த கருத்துக்கு, ‘’நிச்சயமாக மாற்றம் வரும். இன்றைக்கு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னவர் 2026க்கு பிறகு நான் சினிமாவிற்கு செல்கிறேன் என்ற மாற்றத்தை ஏற்படுத்துவார்’ என்றார். தவெகவின் வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு பிரசாரம் குறித்த கேள்விக்கு, ‘’தொடங்கட்டும். அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்தால் கூட, எவ்வளவு வித்தை காட்டினாலும் மக்களிடம் காசு பெறுகிறபோது இறங்கி வந்துதான் ஆகவேண்டும். ஓட்டு என்ற மகத்தான சக்தி மக்களிடம் உள்ளது. அந்த மகத்தான சக்தி எங்கள் முதலமைச்சரின் பக்கம் உள்ளது. நிச்சயம் வென்று காட்டுவோம்’ என்று அமைச்சர் கூறினார்.