சென்னை: லேசான தலை சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை 3 நாள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அரசு பணிகளை தவிர, கட்சி பணிகளிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று திமுகவினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் வழக்கமாக தினமும் காலை நடைபயிற்சி செய்வார். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி முடித்து விட்டு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு அவரது முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அவரது வாகன அணிவகுப்பு புறப்பட்ட சிறிது நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது காரை அப்போலோ மருத்துவமனைக்கு செல்ல உத்தரவிட்டார். அங்கு சென்றதும் டாக்டர்கள் அவருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி குறித்து, அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காலை நடைபயிற்சியின் போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பரிசோதனைகளுக்காக கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொளத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துமாறு அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற தகவல் அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மருத்துவமனைக்கு சென்றனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை காண துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்கள் முதல்வர் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
மேலும், 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்று, நாளை கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரிடம் நலம் விசாரித்த ரஜினி, கமல்: தலைச்சுற்றல் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது குறித்து அறிந்த நடிகர் ரஜினிகாந்த், செல்போன் மூலமாக முதல்வரை தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், போன் மூலம் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடமும் முதல்வரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்று காலை முதலமைச்சருக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து மருத்துவர்கள் அறிக்கை அளிப்பார்கள். 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முதலமைச்சருக்கு விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என கூறினார்.