பிடே செஸ் உலககோப்பை சாம்பியன்; எனது வெற்றி விதி என்றே கூறவேண்டும்... இன்னும் சாதிப்பேன்: திவ்யா தேஷ்முக் நெகிழ்ச்சி
ஜார்ஜியா: பிடே செஸ் உலககோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 4வது இந்திய வீராங்கனை, இந்தியாவின் 88வது கிராண்ட் மாஸ்டர் என்ற பல சாதனைகள் நிகழ்த்திய நாக்பூர் மங்கை திவ்யா தேஷ்முக்கிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்திருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நாக்பூருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மகராஷ்டிரா மாநிலத்துக்குமே திவ்யா பெருமை தேடி தந்துள்ளார். இந்த வெற்றி மூலம் இந்தியா இன்னும் மிளிர்கிறது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்திருக்கும் திவ்யா மற்றும் கோனேரு ஹம்பி இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.’’ என்று கூறினார். வெற்றிக்கு பிறகு திவ்யா கூறுகையில், உலககோப்பை தொடங்கும் முன்பு நான் சாம்பியன் ஆவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. தொடரில் பங்கேற்ற போது கிராண்ட் மாஸ்டருக்கான தகுதிகள் எதுவும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால் தற்போது பட்டம் வென்றிருப்பது குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை. இது விதி என்றே சொல்ல வேண்டும். கோப்பையை முத்தமிட வேண்டும் என்று என் தலையில் எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன். வெற்றி பெற்ற தருணத்தில் என்னால் என் கண்களை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னையும் மீறி கண்ணீர் ஆர்ப்பரித்துவிட்டது.
இந்த வெற்றிகளிப்பில் இருந்து மீள்வதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும். ஆனால் இதோடு இது நின்றுவிடுவதில்லை. இது வெறும் தொடக்கம் தான். நிச்சயம் இன்னும் அதிகமாக சாதிப்பேன் என்ற உத்வேகத்தை இந்த வெற்றி எனக்கு கொடுத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமான எனது பெற்றோர், பயிற்சியாளர், நண்பர்கள், உறவினர்களுக்கு நான் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன். கூடுதல் போனஸாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் கிடைத்திருக்கும் இத்தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை’’ என்றார். 2024ம் ஆண்டில் புத்தபெஸ் ஒலிம்பியாட் பதக்கமும், அதே ஆண்டில் காந்திநகரில் நடந்த உலக ஜூனியர் டிராபியையும், 2013ம் ஆண்டில் தேசிய அளவில் 9வயதுக்கு உட்பட்டோருக்கான வெற்றிக் கோப்பையையும் திவ்யா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.