Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமானநிலையத்தில் 6 மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை 8.23 சதவீதம் அதிகரிப்பு: விமானங்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்வு

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை 8.23 சதவீதமாக அதிகரித்துள்ளது. இங்கு உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளன என்று விமான நிலைய அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான 6 மாதங்களில் புறப்பாடு, வருகை பகுதியில் 30,49,693 பேர் பயணித்துள்ளனர். எனினும், கடந்த 2024ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 29,73,265 பயணிகள் மட்டுமே பயனித்துள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பன்னாட்டு முனையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2.57 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல், உள்நாட்டு முனையத்தில் நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான 6 மாதங்களில் வருகை, புறப்பாட்டில் பயணிகளின் எண்ணிக்கை 86,93,278 ஆகும். இதுவே கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் பயணிகளின் 78,78,678 எனக் குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டை கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், சென்னை விமான நிலையத்தில் நடப்பாண்டு முதல் 6 மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை 10.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னை விமானநிலையத்தின் பன்னாடு மற்றும் உள்நாட்டு என 2 முனையங்களிலும் நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் பயணிகள் வருகையின் மொத்த எண்ணிக்கை 1,17,42,971 ஆகும். இதுவே, கடந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மேற்கண்ட 2 முனையங்களில் பயணிகளின் வருகை, புறப்பாட்டின் மொத்த எண்ணிக்கை 1,08,51,944 ஆகும். இச்சதவீதத்தை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் பன்னாடு மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 8.23 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேபோல் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் பன்னாடு, உள்நாடு என மொத்தம் 77,748 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதுவே கடந்தாண்டின் முதல் 6 மாதங்களில் இவை இரண்டிலும் மொத்தம் 72,216 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்தாண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக 5,532 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, தோகா, சார்ஜா, இலங்கை, லண்டன், பிராங்பர்ட் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

மேலும் உள்நாட்டு முனையத்தில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி ஆகிய விமானங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவற்றை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளன என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.