Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை அருகே தையூரில் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் புதிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனம்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்

சென்னை: சென்னை அருகே தையூரில் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். சென்னை கேளம்பாக்கத்தில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது: தற்போது செவ்வாய் கிரகம் போன்ற வேறு கிரகங்கள் உள்ளனவா, அவற்றில் மனிதர்கள் வாழ முடியுமா என்றெல்லாம் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. உலக அளவில் விண்வெளித்துறையில் இந்தியா முதல் ஐந்து இடத்திற்குள் உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி என்பது வானியல் குறித்து மட்டும் ஆய்வு செய்வது அல்ல. அதன் மூலம் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், தகவல் தொடர்பு பரிமாற்றங்கள், தொலை உணர்வு (ரிமோட் சென்சார்), விவசாய உற்பத்தி, நாட்டின் எல்லை பாதுகாப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.

இந்த துறையில் தனியார் பங்களிப்பு தற்போது அவசியமாகி வருகிறது. இதன்மூலம் போட்டி தன்மை அதிகரிக்கும். இதனால் ராக்கெட் ஏவுவதற்கு ஆகும் செலவு குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது இளம் விஞ்ஞானி ஆனந்த் குழுவினர் கண்டுபிடித்துள்ள முறை மூலம் திரவ எரிபொருள், திட எரிபொருள் இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் கணிசமாக செலவு குறையும். அதுமட்டுமின்றி ஒருமுறை பயன்படுத்திய ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்த முடியும். தனியார் நிறுவனங்களின் போட்டி காரணமாக ராக்கெட் அறிவியல் மென்மேலும் வளரும். இந்த ஸ்பேஸ் ஜோன் நிறுவனத்தின் சார்பில் வருகிற ஆகஸ்ட் 24ம்தேதி ராக்கெட் ஏவப்பட உள்ளது. நாசாவுக்கு இனி நாம் போக வேண்டிய நிலை இருக்காது. நம்மை தேடி வரும் காலம் வந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஸ்பேஸ் ஜோன் நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி

ஸ்பேஸ் ஜோன் என்ற ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள ஆனந்த், கேளம்பாக்கத்தை சேர்ந்தவர். இவர் கேளம்பாக்கத்தில் உள்ள புவனா கிருஷ்ணன் மெட்ரிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, தாம்பரம் பாரத் பல்கலைக்கழகத்தில் ராக்கெட் ஆராய்ச்சி பிரிவில் உயர்கல்வி முடித்துள்ளார். விண்வெளித்துறையில் உள்ள ஆர்வத்தின் காரணமாக ரூ.4.5 கோடி மதிப்பில் இந்த மையத்தை தொடங்கி உள்ளதாகவும், தனது இந்த புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து விதமான அனுமதிகளையும் தமிழக அரசு உடனே வழங்கி உள்ளதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த மையத்தில் 12 ஆராய்ச்சி சோதனை கூடங்கள் உள்ளன. இவற்றில் 28 இளம் விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். இந்த மையத்தின் மூலம் 75 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ஆனந்த் தெரிவித்தார்.