Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் தொடர் போராட்டம் 3 சட்டங்களின் பெயர்கள், பிரிவு மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு: ஒன்றிய அரசை கண்டித்து கோஷத்தால் பரபரப்பு

சென்னை: இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்தின் பெயர்களையும், சட்ட பிரிவுகளிலும், தண்டனையிலும் மாற்றம் செய்து ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்ட திருத்தங்களுக்கு நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ஜூலை 1ம் தேதியிலிருந்து மூன்று குற்றவியல் சட்டங்களும் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த வாரம் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பு நேற்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் வி.எம்.ரகு மற்றும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

பின்னர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் பேசும்போது, ‘‘ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது. உடனடியாக அச்சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். திருத்திய சட்டத்தின் பெயர்கள் ஆங்கிலத்தில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் உள்ளது. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தற்போது நடைபெறுவது முதற்கட்ட போராட்டம் தான். அந்த மூன்று சட்டத்தை அமல்படுத்துவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களை ஒன்றிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தேவையென்றால் அகில இந்திய அளவில் வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசு சட்டங்களில் கொண்டுவந்த திருத்தங்களை கண்டித்து கடுமையான விமர்சனம் செய்து பேசினர்.