2 நாள் போராட்டத்திற்கு பிறகு சதுரகிரி வனப்பகுதியில் காட்டுத் தீ அணைப்பு: பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில், சதுரகிரி வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத் தீ பரவியது. இந்த தீயானது மேகமலை புலிகள் சரணாலயம், அணில்கள் சரணாலயம் பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகின. வனவிலங்குகளும் இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு நேற்றிரவு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இதற்கிடையே காட்டுத் தீ காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. தீ அணைக்கப்பட்டதை அடுத்து இன்று வழக்கம்போல் பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.