Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கரைபுரண்டோடும் காவிரி; முக்கொம்புவிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி: திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் தண்ணீர் வெள்ளம்போல் கரைபுரண்டோடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பதால் இன்று மாலை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ெதன்மேற்கு பருவமழை கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் முன்கூட்டியே தொடங்கியது. இதனால் ஜூன் மாதம் 2வது வாரத்திலே கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்குகு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதன் காரணமாக நீர்மட்டம் மளமளவென உயர்ந்து அணை நிரம்பும் தருவாயை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 2 வாரங்களில் காவிரி அற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. இதனால் இந்தாண்டு குறித்த நேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 58,105 கன அடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 43,429 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆறு கரைபுரண்டோடுகிறது.

திருச்சியில் உள்ள முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை அணைக்கு 24,713 கனஅடி தண்ணீர் வருகிறது. இதை அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று (30ம் தேதி) மாலை 4 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. முக்கொம்புக்கு வரும் நீர் வரத்தினை பொறுத்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கக்கூடும்.

எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு திருச்சி மாவட்டகலெக்டர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் கல்லணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கல்லணையிலிருந்து காவிரியில் இன்று காலை 9.312 கன அடியும், வெண்ணாற்றில் 9,306 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,514 கன அடியும், கொள்ளிடத்தில் 2,255 கன அடி என அணையிலிருந்து மொத்தம் 24,397 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால் டெல்டா மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.