Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி (வினாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். கர்நாடக அரசின் இந்த நியாயமற்ற முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது.

காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் ஆணைப்படி தமிழகத்திற்கு திறந்து விடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ள தகவல்கள் உண்மைக்கு மாறானவை ஆகும். கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் நேற்றிரவு நிலவரப்படி நீர் இருப்பு 77 டி.எம்.சி ஆகும். இது நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 68% ஆகும். அதுமட்டுமின்றி, நேற்றைய நிலவரப்படி நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 36,221 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு தினமும் 3.15 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலையில் அதிலிருந்து ஒரு டி.எம்.சி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு தினமும் 8000 கன அடி வீதம் தண்ணீர் திறப்பதாக கர்நாடக அரசு அறிவித்திருப்பது கூட தமிழ்நாட்டின் மீதான நல்லெண்ணத்தின் காரணமாகவோ, காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் தீர்ப்பை மதித்தோ அல்ல. மாறாக, அங்குள்ள அணைகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் தான். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டி.எம்.சி ஆகும். நேற்றிரவு நிலவரப்படி கபினி அணையின் கொள்ளளவு 19.10 டி.எம்.சியாக அதிகரித்து விட்டது. இனியும் அணையில் தண்ணீரை சேமிக்க முடியாது என்ற நிலையில், கபினி அணைக்கு வினாடிக்கு 19,027 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கபினி அணைக்கு வரும் தண்ணீரை இனி ஒரு மணி நேரம் கூட அணையில் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் அணைக்கு வரும் தண்ணீரில் வினாடிக்கு 8000 கன அடி தண்ணீரை திறந்து விட்டு, மீதமுள்ள நீரை தனது பாசனத் தேவைக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறது. இப்போதும் தமிழ்நாட்டை தனது வடிகாலாகத் தான் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, தமிழகத்திற்கு மனமுவந்து தண்ணீர் வழங்கவில்லை.

கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த இரு நாட்களுக்குள் கூட்டி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அதையும் கர்நாடகம் மதிக்காவிட்டால், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.