மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்ட மேலவையில், பாஜக எம்எல்ஏ அமித் கோர்கே கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதில், ‘காகிதத்தில் (சாதி சான்றிதழ்) மட்டும் தாங்கள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டு, சிலர் ரகசியமாக வேறொரு மதத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் சட்டவிரோதமாக குறிப்பிட்ட வகுப்பினரின் சாதி சான்றிதழ்களைப் பெற்று, அதன்மூலம் அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பலன்களை அனுபவித்து வருகின்றனர்’ என்றார்.
இதேபோல், மற்றொரு பாஜக எம்எல்ஏ சித்ரா வாக் பேசுகையில், ‘கணவனின் மதத்தை மறைத்துத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் பெண்களை மதமாற்றத்திற்கு வற்புறுத்தும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதுபோன்ற கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘இந்து, பவுத்தம் மற்றும் சீக்கிய மதங்களைத் தவிர, பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் மோசடியாக சாதிச் சான்றிதழைப் பெற்றிருந்தால், அது உடனடியாக ரத்து செய்யப்படும்.
அந்தச் சான்றிதழைக் கொண்டு அரசு வேலை போன்ற இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற்றிருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், அந்த வெற்றி செல்லாது என அறிவிக்கப்படும். மேலும், ஏமாற்றியோ அல்லது வற்புறுத்தியோ செய்யப்படும் மத மாற்றங்களைத் தடுக்க மிகக் கடுமையான சட்ட விதிகளைக் கொண்டுவர மாநில அரசு விரும்புகிறது. இதுகுறித்து டிஜிபி தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஆய்வு செய்து, விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்’ என கூறினார்.