புதுடெல்லி: நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்ட இத்தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு நடப்பதற்கு ஒருநாள் முன்பாக பீகாரின் பாட்னாவில் வினாத்தாள் கசிந்ததாக போலீசார் சிலரை கைது செய்தனர்.
அதே போல, குஜராத், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே, நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது வழக்கத்திற்கு மாறாக 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றதும் பெரும் சந்கேத்தை ஏற்படுத்தியது. தேர்வெழுத போதிய நேரம் வழங்கப்படாததால் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்தது.
பின்னர் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு 1,563 மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வை 813 பேர் மட்டும் எழுதினர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனவும், மறுதேர்வு கோரியும் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பாக ஏராளமான மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேசமயம் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசும், தேசிய தேர்வு முகமையும் தனித்தனியாக பதில் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. அதில், ‘‘நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவில்லை. ஒரு சில இடங்களில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட தவறுகள் நடந்துள்ளன. மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரையிலும் நாடு முழுவதும் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் நீட் தேர்வை ரத்து செய்வதோ, மறுதேர்வு நடத்துவதோ, நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே லட்சக்கணக்கான மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது’’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீட் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 38 மனுக்கள் மீதும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணை தொடங்குகிறது. நாடு முழுவதும் இந்த வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.