வாலாஜா: சென்னை தி.நகரை சேர்ந்தவர் கருணாகரன்(64), வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ஸ்வேதா(23). இருவரும் பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்றிரவு மீண்டும் சென்னைக்கு காரில் புறப்பட்டனர். காரை, சென்னையை சேர்ந்த லட்சுமணன்(43) என்பவர் ஓட்டினார். இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னிவேடு பைபாஸ் சாலையில் வந்தபோது சாலையோரமாக நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதில் கருணாகரன், ஸ்வேதா இருவரும் படுகாயம் அடைந்தனர். டிரைவர் லட்சுமணன், இருவரையும் காரில் இருந்து மீட்டார். பின்னர் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்த வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.