பிஎஸ்பி கல்லூரிக்கு 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைப்பு.. விதிகளை பின்பற்றாத கல்லூரி மீது தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை!!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பி.எஸ்.பி. மருத்துவக் கல்லூரியில் இவ்வாண்டு 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. பிஎஸ்பி கல்லூரியில் இவ்வாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024ல் 150 பேரை எம்பிபிஎஸ்-ல் சேர அனுமதித்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை பின்பற்றாததால் காஞ்சிபுரம் பிஎஸ்பி மருத்துவக் கல்லூரிக்கு 50 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் இவ்வாண்டு மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் குறையும் அபாயம் உள்ளது.
நாடு முழுவதும் இவ்வாண்டு 766 மருத்துவக் கல்லூரிகளில் 1.15 லட்சம் எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 77 மருத்துவக் கல்லூரி, மதுரை எய்ம்ஸ், இஎஸ்ஐசியில் மொத்தம் 12,000 மருத்துவ இடங்கள் உள்ளன. மேலும், விதிமுறைகளை பின்பற்றாத ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் முழுமையாக அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.