Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சகோதரத்துவத்தை போற்றும் ஈகை திருநாள்

இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். இந்த மாதத்தின் போதுதான் இறைத் தூதரான முகமது நபி அவர்களின் மீது இறைவன் அல்லாஹ் அவர்களால் புனித குரான் இறக்கி வைக்கப்பட்டது என்று இஸ்லாமிய புராணங்கள் தொிவிக்கின்றன. ரம்ஜான், ரமலான் பண்டிகை என்று மக்களால் அழைக்கப்படும் இந்தப் பண்டிகையை ஈதுல் ஃபித்ர் என்றும் கூறப்படுகிறது. ரம்ஜான் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பண்டிகையாகும். இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை.

அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாள் ‘ரம்ஜான் பண்டிகை. இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர்களுக்குமே, அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், சாத்தான்கள் விலகி ஓடும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும், நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் திருக்குர் ஆன், இப்பூவுலகில் அருளப்பட்ட மாதம் என அனைத்தும் அருள் நிறைந்த மாதமாக இருப்பதால், உடல்நலம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக ஒரு சிலர் தவிர அனைவருமே நோன்பு இருக்க என்றுமே தவறுவதில்லை.

நம் வாழ்வில் அகமும்-புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சியாகவே இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது. சொர்க்கத்தில் ரய்யான் என்ற சொர்க்க வாசல் குரானில் உண்டு. ரமலான் மாதத்தில் கண்ணியமாக நோன்பு இருந்தவர்கள் மட்டுமே இந்த வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள் என்பது இஸ்லாம் மத நம்பிக்கை. இந்த ரமலான் மாதத்தில் நோன்பை கடைப்பிடிப்பவர்கள், அடுத்து வரும் 11 மாதங்களுக்கு பலன் அனுபவிப்பார்கள். அவர்கள் நேர்மை தவறும்பொழுது, இந்த ரமலான் மாதத்தில் பட்டினியாகக் கிடந்ததைத் தவிர வேறு எந்த நன்மையும் அவர்கள் செய்யவில்லை என்பது பொருளாகிவிடும்.

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாதத்தில் பின்பற்றப்படவேண்டிய கொள்கைகள். அப்படி இருக்கும்பொழுதுதான், மனது தூய்மையை நாடும் என்பது அதன் மறைபொருளாக இருக்கிறது. அதாவது அதிகாலை முதல், மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், பிற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவதை உணர்த்துகிறது.

இந்த மாதத்தில் நன்மைகள் செய்யாதவர்கள் எல்லாவிதமான நன்மைகளையும் இழந்தவர் என்றும், பாவமன்னிப்புக் கேட்காதவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டு வெகு தொலைவில் இருப்பவர்கள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. நோயின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும் முதுமை உள்ளிட்ட பிற காரணங்களால் நோன்பினை அனுசரிக்க முடியாதவர்கள், ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்காவது உணவளிக்க வேண்டும் என்று திருக்குர் ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டு அன்பை பரிமாறிகொள்வார்கள்.