புதுடெல்லி: பிரதமர் மோடி வரும் 23ம் தேதி முதல் 26 ம் தேதிவரை 4 நாட்களுக்கு பிரிட்டன்,மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுபயணம் செல்கிறார். இது குறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மரின் அழைப்பை ஏற்று வரும் 23ம் தேதி பிரிட்டனுக்கு செல்கிறார்.
இந்த பயணத்தின் போது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்ைப மேம்படுத்துவது குறித்து கெயர் ஸ்டார்மருடன் அவர் ஆலோசனை நடத்துவார். மோடியின் பயணத்தின் போது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன. மேலும் பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸையும் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நான்காவது முறையாக பிரிட்டனுக்கு செல்ல உள்ளார்.
இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி மாலத்தீவுக்கு செல்கிறார். 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அங்கு அவர் சுற்று பயணம் செய்கிறார். இந்த பயணத்தின் போது மாலத்தீவின் 60 வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் பிரதமர் நாட்டின் அதிபர் முகமது முய்சுவுடன் இரு தரப்பு நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிறார். மாலத்தீவுக்கு செல்வது இது மோடியின் மூன்றாவது பயணமாகும். முகமது முய்சு அதிபரான பிறகு முதல்முறையாக அந்த நாட்டுக்கு செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.