Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு அருகே பூச்சி அரிப்பினால் வாழை மரங்கள் நாசம்: விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், தற்போது பூச்சிகளால் அரிக்கப்பட்டு நாசமடைந்து உள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இவற்றை தடுக்க வேளாண்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (43). இவர், பாலாற்று படுகையை ஒட்டிய அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அந்நிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார். இதேபோல், இப்பகுதியை சேர்ந்த பலர், ஒருசிலரின் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் குத்தகை நிலத்தில் நிலக்கடலை, நெற்பயிர் மற்றும் ஒரு ஏக்கரில் வாழை மரங்களை சுகுமார் பயிரிட்டிருந்தார்.

இதில் அரை ஏக்கரில் பயிரிட்ட நிலக்கடலை சுகுமாருக்கு நஷ்டம் ஏற்படவில்லை. எனினும், ஒரு ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்களில் தார் வைக்கும் நிலையில், தற்போது வாழை மரங்களுக்கு இடையே விஷப் பூச்சிகள் ஊடுருவியதால், அனைத்து வாழை மரங்களும் வளர்ச்சி குறைந்து, பூச்சிகள் அரித்த நிலையில் உருக்குலைந்து நாசமடைந்து உள்ளன. இதனால் சுகுமாருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், இப்பகுதியை சேர்ந்த பல்வேறு விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, வில்லியம்பாக்கம் பகுதியில் பூச்சி அரிப்பினால் பாதிக்கப்பட்ட வாழை மரங்கள், நெற்பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்களை சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இத்தகைய பூச்சி அரிப்புகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.