Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூளையை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்; சீனாவின் புதிய உளவு ஆயுதம் ‘சைபோர்க்’ ேதனீ: பூகம்ப மீட்பு, தீவிரவாத தடுப்புக்கும் உதவும்

பீஜிங்: உலகின் பல நாடுகள் உயிரினங்களையும், இயந்திரங்களையும் இணைத்து ‘சைபோர்க்’ என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்தன. இதற்கு முன்பு, சிங்கப்பூர் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கருவியே உலகின் மிக இலகுவான பூச்சி கட்டுப்பாட்டுக் கருவியாக இருந்தது. ஆனால், அந்த கருவி தற்போதைய சீனக் கருவியை விட மூன்று மடங்கு எடை கொண்டதாக இருந்தது. மேலும், வண்டுகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்ற மெதுவாக ஊர்ந்து செல்லும் பூச்சிகளை மட்டுமே அதனால் கட்டுப்படுத்த முடிந்தது. அவையும் குறைந்த தூரம் மட்டுமே பயணித்து, விரைவில் சோர்வடைந்துவிடும். இந்த பழைய தொழில்நுட்பத்தின் குறைபாடுகளைக் கடந்து, புதிய சாதனையை நிகழ்த்த சீனா முயற்சி செய்து வந்தது. இந்த நிலையில், சீனாவின் பெய்ஜிங் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாவோ ஜிலியாங் தலைமையிலான குழு, உலகின் மிக இலகுவான பூச்சியின் மூளைக் கட்டுப்பாட்டுக் கருவியை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது.

வெறும் 74 மில்லிகிராம் எடையுள்ள இந்த சாதனம், தேனீயின் முதுகில் பொருத்தப்பட்டு, அதன் மூளையில் மூன்று ஊசிகளைச் செலுத்துகிறது. பின்னர், மின்னணு துடிப்புகள் மூலம் சமிஞ்சைகளை உருவாக்கி, தேனீயை இடது, வலதுபுறம் திருப்பவும், முன்னேறவும், பின்வாங்கவும் கட்டளையிடுகிறது. பத்து முறை கட்டளையிட்டால், ஒன்பது முறை தேனீ கீழ்ப்படிந்துள்ளதாக ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘சைபோர்க்’ தேனீக்களை, ராணுவ உளவுப் பணிகளுக்கும், நகர்ப்புற பயங்கரவாதத் தடுப்பு மற்றும் பூகம்ப இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் மீட்புப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதற்கு வயர் மூலம் மின்சாரம் தேவைப்படுவது மற்றும் நீண்ட நேரம் இயங்கும் பேட்டரிகளின் அதிக எடை போன்ற சில சவால்கள் இன்னும் உள்ளன. இந்தத் துறையில் சீனா தற்போது அபார வளர்ச்சி கண்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.