12% இறப்புக்கு வழிவகுக்கிறது
பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் மனிதர்களுக்கு 5 சதவீதம் முதல் 11 சதவீதம் வரையிலான உடல்நல பாதிப்புகள் மூளை நரம்பியல் நோய்களால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதேபோல் 12 சதவீத இறப்புகள் நரம்பியல் நோய் காரணமாக ஏற்படுகிறது. மூளை நரம்பியல் நோய்களின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நோய்களின் தாக்கத்தால் உடல் செயலிழப்பு அபாயங்களும் அதிகளவில் நேர்கிறது. மனித உடலின் செயல்பாடு மற்றும் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் உடலின் தலைவன் மூளை. மூளை என்பது நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இது உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமிக்ஞைகளை எடுத்துச் செல்லும் நரம்புகளை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே மூளை பாதிக்கப்படும் போதும், நோய்கள் ஏற்படும் போதும் உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது.
எனவே மூளை தொடர்பான பாதிப்புகளை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு என்பது பெருத்த அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு சர்வதேச நரம்பியல் கூட்டமைப்பு சார்பில் ஆண்டு தோறும் ஜூலை 22ம் தேதி ‘உலக மூளை தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மூளை நரம்பியல் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: மூளை சார்ந்த நோய் பாதிப்புகள் என்பது உலகளாவிய பரவலாக உள்ளது. இந்தவகையில் இந்தியாவில் மூளைகாயம் என்பது சவாலாக உருவெடுத்து வருகிறது. மூளைச்சேதம் அல்லது மூளைக்காயம் என்பது மூளைகளில் உள்ள செல்கள் அழியும் போது நடக்கிறது. அல்லது சிதைவடையும் போது நிகழ்கிறது. எதிர்பாராத அதிர்ச்சியால் மூளைக்கு செல்லும் நரம்பு சேதம் ஆகும் போது மூளையால் அதை தாங்க முடிவதில்லை. இதனால் செயல் இழக்கிறது. அதேபோல் தலையில் ஏற்படும் காயமும், பிரசவத்தின் போது நிகழும் மூச்சுத்திணறலும் மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை தடுக்கிறது.
இதன்காரணமாகவும் மூளை சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது போன்ற மூளைகாயம் மற்றும் சிதைவு என்பது வலிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கும் காரணமாக அமைகிறது. உலகளவில் மூளை சார்ந்த பாதிப்பு மற்றும் நோய்களால் பாதிப்போர் எண்ணிக்கை 5 முதல் 7 கோடியாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில் 17.4 சதவீதம் பேர் பிறப்பு தொடர்பான மூளைக்காய பாதிப்புகளில் சிக்குவதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. பிறப்பு சார்ந்த மூளைக்காயங்கள் என்பது பெரும்பாலும் கர்ப்பிணிகளின் உழைப்பு மற்றும் பிரசவத்தின் போது இயற்கையாக நிகழும் காரணிகளால் ஏற்படுகிறது. கடினமான பிரசவத்தின் போது மூளைக்காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தற்போது சிசேரியன் பிரசவங்களே அதிகளவில் நடக்கிறது. பெரும்பாலான பிரசவங்களில் பிறப்பு கால்வாயில் நுழையும் முதல் பகுதியாக குழந்தையின் தலை உள்ளது.
கருவின் மண்டை ஓட்டின் எலும்புகள் நிலையாக நிறுத்தப்படாமல் இருக்கும். இதனால் உச்சந்தலையில் வீக்கம் மற்றும் சிராய்ப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். பொதுவாக இது சிலநாட்களில் சரியாகி விடும். இருப்பினும் அவை சிவப்பு நிறமாக மாறினாலோ அல்லது திரவத்தை வெளியேற்ற தொடங்கினாலோ உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மிகவும் அரிதாக சிலநேரங்களில் இந்த வீக்கம் என்பது ரத்தத்தை கட்டியாக்கி உச்சந்தலையில் கடினமான ஒரு கட்டியை உருவாக்கி விடும். அப்படி உருவானால் துரிதமாக சிகிச்சை அளித்து அதனை அகற்ற வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு அறிவுரைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த நடப்பாண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ‘அனைவருக்கும் மூளை ஆரோக்கியம்’ என்ற இலக்கோடு நடப்பாண்டு உலக மூளை தினம் அனுசரிக்கப்படுகிறது. நரம்பியல் நோய்களுக்கான ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை கையாள்வதே இதன் நோக்கமாகும். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்
சுறுசுறுப்புக்கு வழிமுறைகள்
‘‘மனித மூளை இயற்கையின் அற்புதமான படைப்பு. ஒன்றரை கிலோ எடை கொண்ட இந்த உறுப்பு சுமார் 100பில்லியன் நரம்புகளைக் கொண்ட சிக்கலான அமைப்பாகும். குறைந்தபட்சம் ஏழுமணி நேர தூக்கம், ஒரு நாளைக்கு 2மணி நேர உடற்பயிற்சி, வாகனங்கள் ஓட்டும் போது விதிமுறைகளை கடைபிடித்து முன்னெச்சரிக்கையாக இருப்பது, மனச்சோர்வு, பதற்றம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுதல், தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு நிகோடின் உணவுகள் மற்றும் பானங்களை தவிர்த்தல், பச்சை காய்கறிகள், பீன்ஸ், கடல் உணவுகள், கொட்டைகள், விதைகள் போன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை நரம்புகளின் இயக்கத்திற்கு வழிவகுத்து மூளையையும் சுறுசுறுப்பாக்கும்,’’ என்பது மூளை சார்ந்த நரம்பியல் நிபுணர்கள் வழங்கியுள்ள அறிவுரை.
அதிக செல்போன் பயன்பாடு ஆபத்து
‘‘காலையில் எழுந்தவுடன் மொபைல் போன்கள் போன்ற சாதனங்களுடன் தொடர்பு கொள்வது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எழுந்தவுடன் உடனடியாக மொபைலைப் பார்ப்பது நமது மன அழுத்தத்தை அதிகரித்து உங்களை சோர்வடையச் செய்யும். இது நமது பார்வை மற்றும் மூளையின் செயல்பாட்டை வலுவாக பாதிக்கின்றது. ஒவ்வொரு முறையும் செல்போனை பயன்படுத்தும் போது நம்மிடம் பற்றிக் கொள்ளும் பதட்டமும் ஆர்வமும் உடலில் மன இறுக்கத்தை ஏற்படுத்தும். இது ‘கார்டிசால்’ எனும் ஹார்மோனை அதிகமாக சுரக்க செய்கிறது. அதன் விளைவாக மூளையின் ஆற்றலை மேம்படுத்தும் ‘டோபோமைன்’ குறைகிறது’’ என்பது போன்ற தகவல்களும் ஆய்வுகளில் வெளியாகி உள்ளது.