திருவள்ளூர்: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை சிபிசிஐடி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பியை கடத்தியது தொடர்பாக திருவாலங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் காவலர் மகேஸ்வரி, பூந்தமல்லி துத்தம்பாக்கம் வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை கடந்த மாதம் 13-ம் தேதி திருவாலங்காடு போலீஸார் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன் மூர்த்தி, போலீஸ் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, ஏடிஜிபி-யை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது; பூவை ஜெகன் மூர்த்திக்கு கண்டனம் தெரிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம், கைது உத்தரவை ரத்து செய்தும், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை கடந்த மாதம் 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை கடந்த மாதம் 30-ம் தேதி நடந்தது. அவ்விசாரணையில், பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் அளித்தது உச்சநீதிமன்றம்.
இச்சூழலில், புழல் மத்திய சிறையில் உள்ள வனராஜா உள்ளிட்ட 5 பேரை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ஏற்கனவே சிபிசிஐடி போலீஸார் திருவள்ளூர் ஜே.எம்-1 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை நேற்று விசாரித்த திருவள்ளூர் ஜே.எம்.-1 நீதிமன்ற நீதிபதி, வனராஜா, மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மாநில அரசுக்கு டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து உள்ளனர்.


