டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை பகல் 12 மணி வரையும், மக்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் வரி விதிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கியும் மறுத்ததால் எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் முடங்கின. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு முன்வந்தது.
இந்நிலையில் இன்று (ஜூலை 31) மக்களவை கூடியதும் அமெரிக்க வரி விதிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா பலமுறை எச்சரித்தும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தும் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்புவதை நிறுத்திவிட்டு தங்கள் இருக்கைகளுக்குத் திரும்ப வேண்டும். நீங்கள் போராட்டம் நடத்தும் உறுப்பினர்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லையா?என்று அவர் கூறினார், மேலும் மக்கள் உங்களை சபையில் கோஷமிடத்தான் தேர்ந்தெடுத்தார்களா என்று கேட்டார்.
சபை பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கானது, உறுப்பினர்களின் நடத்தை பொருத்தமானதல்ல என்று கூறி அவையை சபாநாயகர் ஓம்.பிர்லா ஒத்திவைத்தார். அதேபோல், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. முன்னதாக அவை கூடியதும் இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை நிலைநிறுத்திய ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதற்காக விஞ்ஞானிகளை நாடாளுமன்றம் பாராட்டியது.