Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜவுக்கு ஆதரவாக வாக்கு திருட்டு தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டு: ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி

புதுடெல்லி: பாஜவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும், அதற்காக 100 சதவீத ஆதாரம் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ” வாக்குத் திருட்டு நடக்கிறது என்று நான் கூறினேன். இப்போது தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதற்கான வெளிப்படையான மற்றும் மூடிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. நான் இதை சாதாரணமாக கூறவில்லை.

தேர்தல் ஆணையத்துக்கு எதிரான 100 சதவீத ஆதாரங்களுடன் கூறுகிறேன். நாங்கள் இதனை வெளியிட்ட உடன் தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது என்பதை முழு நாடும் அறிந்து கொள்ளும். பாஜவுக்காக தான் தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபடுகின்றது. கடந்த ஆண்டு மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலிலும், பின்னர் மக்களவை தேர்தலிலும் தேர்தல் முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு சந்தேகம் இருந்தது.

இது மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின்போது மேலும் அதிகமானது. மாநில அளவில் வாக்குகள் திருட்டு நடந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம். வாக்காளர் திருத்தம் நடந்தது. கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இது குறித்த சந்தேகத்தை தெளிவு செய்வதற்கு தேர்தல் ஆணையம் உதவவில்லை. நாங்களே இதில் விரிவாக ஆராய்ந்து ஆழமாக தோண்டுவதற்கு முடிவு செய்தோம். எங்கள் சொந்த விசாரணையை முடித்தோம். இதற்கு ஆறு மாதங்கள் ஆனது.

நாங்கள் கண்டுபிடித்தது ஒரு அணுகுண்டு. அது வெடிக்கும்போது தேர்தல் ஆணையத்துக்கு நாட்டில் ஒளிந்து கொள்வதற்கு இடமிருக்காது. உயர்மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை இதில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதால் அவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது தேசத்துரோகம். அதற்கு குறைவில்லை. நீங்கள் ஓய்வு பெற்றிருக்கலாம். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். நாங்கள் உங்களை கண்டுபிடிப்போம்\” என்றார்.

* ஆபத்தான நடத்தை

ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், “காங்கிரஸ் தேர்தல்களில் வெற்றி பெறும்போது எல்லாமே முட்டாள்தனமாக இருக்கும். ஆனால் அவர்கள் தேர்தலில் தோல்வியடையும்போது தேர்தல் ஆணையமே காரணமாகிவிடும். இது ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதற்கான சதி.

தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புக்களை இழிவுபடுத்தி தீங்கிழைக்கும் பிரசாரத்தை நடத்துகிறார். இது ஆபத்தான நடத்தை மற்றும் அணுகுமுறை. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு ராகுல்காந்தி ஒரு மோசமான விளையாட்டை விளையாடுகிறார் என்று மக்கள் கூறத் தொடங்கியுள்ளனர்” என்றார்.

* ‘பொறுப்பற்ற கருத்துக்களை புறக்கணியுங்கள்’

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், “தினசரி அடிப்படையில் கூறப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையம் புறக்கணிக்கிறது.

தினசரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை புறக்கணித்து நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பணியாற்றுமாறு ஆணையம் கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தது.