Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜகவுக்கு பாடம் புகட்ட ‘இந்தியா’ கூட்டணி புது வியூகம்; துணை சபாநாயகர் வேட்பாளர் அவதேஷ் பிரசாத்?: கூட்டத் தொடர் முடிய 3 நாட்களே உள்ளதால் பரபரப்பு

கொல்கத்தா: பாஜகவுக்கு பாடம் புகட்டும் வகையில் ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் துணை சபாநாயகர் வேட்பாளராக அவதேஷ் பிரசாத்தை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிய 3 நாட்களே உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை துணை சபாநாயகரை எதிர்கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூறி வந்த நிலையில், அதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்துவரவில்லை.

அதனால் மக்களவை சபாநாயகர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜக எம்பியான ஓம் பிர்லாவும், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷூம் போட்டியிட்டனர். மக்களவையில் நடந்த குரல் வாக்கெடுப்பின் மூலம் இரண்டாவது முறையாக ஓம் பிர்லா, 18வது மக்களவையின் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் துணை சபாநாயகர் தேர்வு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், தற்போது இந்த பதவி குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. கடந்த 2004, 2009 ஆகிய காலங்கட்டங்களில் பாஜக எதிர்கட்சியாக இருந்த போது, அக்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டது. 2014ல் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. 2019ல் துணை சபாநாயகரை நியமனம் செய்யாமலேயே ஆட்சியை நடத்தி முடித்தனர். ஆனால் தற்போதும் துணை சபாநாயகர் நியமனம் குறித்தும் ஆளுங்கட்சி அமைதியாக இருப்பதால், எதிர்கட்சிகள் இவ்விசயத்தை சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளன.

துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு வழங்குவாதா? இல்லை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வழங்குவதா? அல்லது தாங்களே வைத்துக் கொள்வதா? என்பதை பாஜக இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் துணை சபாநாயகர் வேட்பாளராக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பைசாபாத் தொகுதி (அயோத்திக்கு உட்பட்ட தொகுதி) எம்பி அவதேஷ் பிரசாத்தை முன்னிறுத்துவது குறித்து திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆய்வு செய்து வருகின்றன. அதேநேரம் கேரளாவில் இருந்து எட்டு முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கே.சுரேஷை, துணை சபாநாயகராக களமிறக்க காங்கிரஸ் கட்சி ஆர்வமாக உள்ளதாக செய்திகள் வருகிறது.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ‘துணை சபாநாயகர் தேர்வு குறித்து ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி ஆகிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்’ என்றார். ‘​இந்தியா’ கூட்டணி கட்சியின் சார்பில் பாஜகவுக்கு சரியான செய்தியை அளிக்க வேண்டுமானால், பைசாபாத் (அயோத்தி) எம்பியை தான் துணை சபாநாயகர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று கூட்டணியின் மற்ற தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஜூலை 3ம் தேதியுடன் (3 நாட்கள் மட்டுமே உள்ளது) இந்த கூட்டத் தொடர் முடிவதால், துணை சபாநாயகர் தேர்வு குறித்து அவையில் குரல் எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதேநேரம் துணை சபாநாயகர் தேர்வு குறித்து எதிர்கட்சிகளின் முன்மொழிவை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கவில்லை என்றால், அதற்கு பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று திரிணாமுல் மூத்த எம்பி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘17வது மக்களவை வேறு; 18வது மக்களவை வேறு. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது; பாஜக அரசு அல்ல. இந்த அமர்விலும், அடுத்து வரும் அனைத்து அமர்வுகளிலும் துணை சபாநாயகர் தேர்வு குறித்து ஆளுங்கட்சிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்’ என்றார். எனவே அடுத்து வரும் நாட்கள் துணை சபாநாயகர் தேர்வு குறித்த அரசியல் விவாதங்கள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.