Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜவின் கூட்டணி ஆட்சி கருத்து விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: திருச்சியில்  எடப்பாடி சந்தித்து பேச திட்டம்?

சென்னை: பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். திருச்சியில் தங்கும் அவரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜவினர் கூட்டணி ஆட்சி என்று கருத்து தெரிவித்து வரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பணியை தொடங்கி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

‘200 தொகுதிகளில் வெல்வோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கி உள்ளார். இதேபோல் எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜ தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்று கூறி வருகிறது.

இதற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜ மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கூட்டணி ஆட்சி தான் என்று அளிக்கும் பேட்டி அனைத்திலும் கூறி வருகிறார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணி ஆட்சி என்று கூறி வருவதால், பாஜவை கழற்றி விடலாமா என்பது பற்றியும் எடப்பாடி யோசித்து வருகிறார். இதுதொடர்பாக விஜய், சீமான் போன்றவர்களுக்கு நேரடியாக அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் எடப்பாடியின் அழைப்பை இதுவரை ஏற்கவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளார். அதாவது 26ம் தேதி (நாளை) மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு அன்று இரவு 7.50 மணிக்கு வருகிறார்.

இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை அவர் திறந்து வைத்து பேச உள்ளார். தொடர்ந்து இரவு 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி வருகிறார். அன்று இரவு பிரதமர் மோடி திருச்சியில் தங்குகிறார். இரவில் தங்கும் அவரை சந்தித்து பேச 13 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலு மணி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கூட்டணி ஆட்சி என்று பாஜ கூறி வரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்திப்பின்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. பிரதமருடனான சந்திப்புக்காகவே எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தனது பிரசாரத்தை மாற்றி அமைத்து உள்ளார். அதாவது 26ம் தேதி அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. தற்போது அதனை 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 27ம் தேதி அரியலூர் மாவட்டம் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக, அவர் 27ம் தேதி காலை 11 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு 12 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு செல்கிறார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து அவர் திருச்சி வந்து மதியம் 2.25 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், தங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும், 7 முறை மோடி தமிழகத்திற்கு வந்தார். இப்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* தூத்துக்குடியில் ஓபிஎஸ் சந்திப்பு?

தூத்துக்குடிக்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தெரிகிறது. தூத்துக்குடியில் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பிரதமர் மோடியை தனது ஆதரவாளர்களுடன் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. முக்கியமாக, தேமுதிக, பாமக, அமமுக மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்களிடம், பிரதமர் மோடியை சந்திக்க வைக்க பாஜ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் போட்டி போட்டு நேரம் கேட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

பிரதமர் மோடி வருகையையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மறுநாள் (27ம்தேதி) காலை வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரியலூர் மாவட்டத்தில் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்க தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.