பாஜக ஆட்சியை கவிழ்த்தது வரலாற்றுப் பிழை.. ஜெயலலிதாவை தாக்கிப் பேசிய கடம்பூர் ராஜு: அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி!!
தூத்துக்குடி: பாஜக ஆட்சியை கவிழ்த்து ஜெயலலிதா வரலாற்றுப் பிழை செய்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக - பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார். அப்போது, 1998ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தது குறித்து கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். இது அவர் பேசியதாவது;
பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததால் மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி 14 ஆண்டுகள் இருக்க நேரிட்டது. பாஜக ஆட்சியை கொண்டு வந்ததும் அதிமுகதான், கவிழ்த்ததும் அதிமுகதான்; வரலாற்றுப் பிழையை செய்தோம். 1999 முதல் 2014ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசில் திமுக பங்கு வகித்தது. சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழிகாட்டுதலால் ஜெயலலிதா வரலாற்றுப் பிழை செய்துவிட்டார் என்றார். பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் ஜெயலலிதாவையே அதிமுக மூத்த தலைவர் விமர்சித்ததால் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.