பெய்ஜிங்: சீனாவில் 2025 ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை, ஆண்டுதோறும் ரூ.44,000ஐ மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது.
இதையடுத்து குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தை பிறப்பை அதிகரிக்க பல சலுகைகளை அறிவித்தது. இருந்த போதிலும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. இந்நிலையில், மேலும் ஒரு திட்டத்தை சீன அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44,000) மானியம் வழங்கப்படும் சீன அரசு அறிவித்தது. இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதன் படி ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப்படும்.
மேலும் 2022 மற்றும் 2024ம் ஆண்டுக்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் பகுதியளவு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையும். குழந்தைகளை வளர்ப்பதற்கான நிதிச் சுமையைக் குறைக்க உதவும். இளம் தம்பதிகளின் கருவுறுதலை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை10 ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்டது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது.