இரவு நேரத்தில் பைக் ரேஸ் தடுக்க சாலையில் தடுப்பு வேலி அமைப்பு: போலீசாரின் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு
அண்ணாநகர்: சென்னையில் இரவு நேரத்தில் பைக் ரேஸ் நடப்பதை தடுக்க சாலையில் தடுப்பு வேலி அமைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்கான போக்குவரத்து போலீசாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். இவற்றை போக்குவரத்து போலீசார் தடுத்து வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே இரவு நேரத்தில் இளைஞர்கள், பைக் ரேசில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதுடன் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். இதனால் பைக் ரேஸ் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கோயம்பேடு நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக இளைஞர்கள், பைக் ரேசில் ஈடுபட்டனர்.
இவ்வாறு ரேசில் ஈடுபடும் நபர்கள், தங்களது விவரங்களை போலீசார் தெரிந்து கொள்ளாமல் இருக்க நம்பர் பிளேட்டுகளில் துணி வைத்து மறைத்தும் நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்தும் பைக் ரேசில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கோயம்பேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எஸ்.பி.சுந்தரம் தலைமையில் போலீசார் ரோந்துவந்து பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஈடுபடுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகன பதிவு எண்களை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பைக் ரேஸ் தடுக்க இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சாலையில் தடுப்பு அமைத்து உள்ளனர். இதன்காரணமாக இரவு நேரங்களில் இளைஞர்கள் ரேஸ் ரேசில் ஈடுபடுவது தொடர்ந்து குறைந்து வருகிறது.