துரைப்பாக்கம்: சென்னை மாநகரின் ஓஎம்ஆர் சாலை உள்பட பல்வேறு பிரதான சாலைகளில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வழியே சென்று வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓஎம்ஆர் சாலையில் நேற்றிரவு பெருங்குடி மாநகராட்சி சாலை எதிர்புறம் செல்லும் சர்வீஸ் சாலை பகுதியில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
மேலும், சர்வீஸ் சாலையில் கீழ்ப்பகுதியில் பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாய் கசிவினால் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, அங்கு ராட்சத பள்ளம் தோன்றியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சர்வீஸ் சாலையில் யாரும் செல்லாதபடி தடுப்பு வேலிகள் அமைத்து, சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் குழாய் மற்றும் ராட்சத பள்ளத்தை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பு நிலவியது.