புதுடெல்லி: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது குழும நிறுவனங்கள் ‘யெஸ்’ வங்கியிலிருந்து பெறப்பட்ட சுமார் ரூ.3,000 கோடி கடனை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, ஏராளமான ஆவணங்கள் மற்றும் கணினி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இந்த சோதனைகளைத் தொடர்ந்து, அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி, வரும் 5ம் தேதி விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ‘யெஸ்’ வங்கியிடமிருந்து பெறப்பட்ட ரூ.3,000 கோடி மதிப்பிலான கடனை,அதன் நோக்கத்தினை மீறி வேறு வழிகளில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தவிர, அனில் அம்பானி குழுமத்தின் சில நிறுவனங்கள் மீது கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக மேலும் பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தன. ஒடிசாவில் ஈடி சோதனை: பெரிய தொழில் நிறுவனங்களுக்கு போலி வங்கி உத்தரவாதத்தை வழங்கியதாக குற்றச்சாட்டு தொடர்பாக புவனேஸ்வரில் உள்ள பிஸ்வால் டிரேட் லிங்க் என்ற நிறுவனத்தின் 3 இடங்களிலும் கொல்கத்தாவில் அதன் துணை நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
8 சதவீத கமிஷனை பெற்று கொண்டு இந்த நிறுவனம் போலி வங்கி உத்தரவாதங்களை வழங்கியுள்ளது. இந்திய சோலார் எனர்ஜி கழகத்துக்கு ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வழங்கிய ரூ.68 கோடிக்கான வங்கி உத்தரவாதம் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன.
* லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு?
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு மேலும் சிக்கலாக, ரூ.3,000 கோடி கடன் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் அவருக்கு எதிராக ஒரு லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக ஈடி வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் செவ்வாய்க்கிழமை அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் லுக்அவுட் நோட்டீஸ் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கு விசாரணையைத் தவிர்ப்பதற்காக தனிநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க லுக்அவுட் சுற்றறிக்கை பயன்படுத்தப்படுகிறது. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்கும் இது விநியோகிக்கப்படுகிறது, மேலும் இதுபோன்ற அறிவிப்புகள் வழங்கப்பட்ட நபர்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றால் அவர்களைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.