சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் நாள் தமிழக அரசு ஆணையிட்டது. 3 மாதங்களுக்குள் இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசு ஆணையிட்டிருந்த நிலையில், கடந்த ஜூலை 11ம் தேதியுடன் 30 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இன்று வரை இடைக்கால அறிக்கையைக் கூட ஆணையம் தாக்கல் செய்யவில்லை.
3 மாதங்களில் முடிக்க வேண்டிய பணியை 30 மாதங்கள் ஆகியும் முடிக்காத தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தங்களுக்கு வழங்கப்பட்ட கடமையை நிறைவேற்ற மேலும் ஓராண்டு காலக்கெடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், அதை உடனே செயல்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.
தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆகிய இரு அமைப்புகளின் முதன்மைப் பணியே மக்களுக்கு சமூகநீதி வழங்குவது தான். இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கையைப் பெற்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.