Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

11 வகை சீர் வரிசையுடன் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா

உறவினர்களை அழைத்து விருந்து

வயதான தம்பதி அசத்தல்

சென்னை: தங்களுக்கு மகள் இல்லாத ஏக்கத்தில் வளர்ப்பு நாய்க்கு 11 வகை சீர் வரிசையுடன் வளைகாப்பு நடத்தி வயதான தம்பதி அசத்தினர். கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் பரணி (62). இவரது மனைவி குமாரி (58). இவர்களுக்கு காமேஷ், சிபிராஜன் என்ற 2 மகன்கள் உள்ளனர். எனினும் மகள் இல்லாததால் ஏக்கத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், இந்த தம்பதி, ‘ரியா’ என்ற பெண் நாயை பாசமுடன் வளர்த்து வருகின்றனர். பரணியும், குமாரியும் அந்த வளர்ப்பு நாய் மீது அளவற்ற பாசம் வைத்துள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரிடம் இணை பிரியா நட்புடன் பழகி பாசமுடன் வளர்ந்து வந்ததால் அந்த நாய் மீது தம்பதி குடும்பத்தினர் அளவில்லா அன்பு காட்டுகின்றனர். இந்நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியான தங்கள் பாச நாய்க்கு வளைகாப்பு விழா நடத்தி மகிழ அவர்கள் ஆசைப்பட்டனர்.

வளைகாப்புக்கான நாள் குறிக்கப்பட்டு, தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். நேற்று பஞ்சு மெத்தையில் அமர வைக்கப்பட்ட நாய்க்கு, ஊரே வியந்து பார்க்கும் வகையில் பட்டுப்புடவை கட்டி, கண்ணாடி வளையல் மாட்டி, மாலை அணிவித்து, நெக்லஸ் அணிவித்து பெண்கள் நலங்கு வைத்தனர். பின்னர் ஆரத்தி எடுத்தனர். அப்போது நலங்கு வைத்த பெண்களுக்கு வெத்தளை, பாக்கு பழத்துடன் தாம்பூலம் வழங்கப்பட்டது. கர்ப்பிணி நாய் முன்பு பழம், இனிப்பு, கார வகைகள், பெடிகிரி, பிஸ்கட் அடங்கிய 11 வகை சீர் வரிசை தட்டுகள் வைத்து வளைகாப்பு விழா இனிதே நடந்தேறியது. முன்னதாக குமாரியின் தம்பி கார்த்திக் என்பவர் நாய்க்கு மலர் மாலை அணிவித்து தாய்மாமன் முறை சடங்கு செய்தார்.

சந்தனத்தில் நலங்கு வைத்து சடங்கு முடித்தவுடன் கர்ப்பிணி நாய்க்கு பிஸ்கட், பிரியாணி வழங்கப்பட்டது. பிறகு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த நண்பர்கள், உறவினர்களுக்கு நாயின் உரிமையாளர் பரணி தம்பதியினர் பிரியாணி விருந்து வழங்கி உபசரித்தார். பெண் பிள்ளை இருந்தால் திருமணம் செய்து வளைகாப்பு நடத்தி இருப்போம் என்றும், அந்த குறையை போக்கும் வகையில் வளர்ப்பு நாய் ரியாவை பெண் பிள்ளையாக பாவித்து தாங்கள் வளைகாப்பு விழா நடத்தி மகிழ்ந்ததாக பரணி-குமாரி நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.