2025ம் ஆண்டுக்கான 5 வகையான விருதுகள், தூயதமிழ்ப் பற்றாளர் பரிசுக்கு தகுநிறை தமிழறிஞர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு!!
சென்னை : 2025ம் ஆண்டுக்கான 5 வகையான விருதுகள் மற்றும் தூயதமிழ்ப் பற்றாளர் பரிசுக்குத் தகுநிறை தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், "சொற்களைக் காத்தால்தான் மொழியைக் காக்க முடியும் என்பதை உணர்ந்து செயலாற்றிவரும் அகராதியியல் அறிஞர்கள், படைப்பாளர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுளையும் பரிசுகளையும் வழங்கிச் சிறப்புசேர்த்து வருகிறது.அவ்வகையியல் நடப்பு 2025ஆம் ஆண்டுக்கான 5 வகையான விருதுகள் மற்றும் தூயதமிழ்ப் பற்றாளர் பரிசுக்குத் தகுநிறை தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழாய்ந்த பெருமக்கள் http://sorkuvai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி, இயக்குநர் (மு.கூ.பொ.) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலகக் கட்டடம், முதல் தளம், எண்: 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை - 600 028 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ, அல்லது http://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ 22.08.2025ஆம் நாள் மாலை 5.00 மணிக்குள் அனுப்பிட வேண்டும்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை,
தேவநேயப் பாவாணர் விருது - pavanarvirudhu@gmail.com
வீரமாமுனிவர் விருது - veeramamunivaraward@gmail.com
தூயதமிழ் ஊடக விருது - oodagavirudu@gmail.com
தூயதமிழ்ப் பற்றாளர் விருது - patralarvirudhu@gmail.com
நற்றமிழ்ப் பாவலர் விருது - paavalarvirudu@gmail.com
தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு - patralarparisu@gmail.com
என்ற மின்னஞ்சல்கள் வழியாகவும் அனுப்பிடலாம். கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044- 29520509 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (22.08.2025) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை அறிஞர் பெருமக்கள் நினைவிற் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
2025ம் ஆண்டிற்கான விருதுகள்
1. தேவநேயப் பாவாணர் விருது
தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் பின்பற்றுதல் உள்ளிட்ட ஆய்வும் தமிழ் ஈடுபாடும் கொண்டு பணியாற்றுகிற, அகராதியியல் துறையில் சிறந்து விளங்குகிற தகுதிவாய்ந்த உள்நாட்டு அறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் தேவநேயப் பாவாணர் விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது.
விருதுத் தொகை ரூ. 2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை
2. வீரமாமுனிவர் விருது
வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கி, தமிழ் அகராதித்துறையில் சிறந்து விளங்கி, தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதி வாய்ந்த அகராதியியல் அறிஞர்கள், வெளிநாடு வாழ் அகராதியியல் அறிஞர்கள், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் அகராதியியல் அறிஞர்கள், தமிழ்நாட்டில் உள்ள அகராதியியல் அறிஞர்களுள் ஒருவருக்கு ஆண்டுதோறும் வீரமாமுனிவர் விருது விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது.
விருதுத் தொகை ரூ. 2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை
3. நற்றமிழ்ப் பாவலர் விருது
கவிதைப் படைப்புகளில் (மரபுக்கவிதை, புதுக்கவிதை) பிறமொழிக் கலப்பில்லாத தூயதமிழ்ச் சொற்களையும் புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தி மொழிக்குப் புத்துயிரும் புது மலர்ச்சியையும் ஏற்படுத்தும் இரு பாவலர்களுக்கு ஆண்டுதோறும் நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது.
விருதுத்தொகை ரூ. 50ஆயிரம், தங்கப்பதக்கம், தகுதியுரை
4. தூயதமிழ் ஊடக விருது
பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழைப் பயன்படுத்தி ஊடகப் பணிகளை ஆற்றிவருகிற, அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகம் (தொலைக்காட்சி மற்றும் வலையொளி) என இரு ஊடகங்களுக்கு ஆண்டுதோறும் தூயதமிழ் ஊடக விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது.
விருதுத்தொகை ரூ. 50ஆயிரம், தங்கப்பதக்கம், தகுதியுரை
5. தூயதமிழ்ப் பற்றாளர் விருது
நடைமுறை வாழ்க்கையிலும், பேச்சுவழக்கிலும் பிறமொழிக் கலப்பில்லாமல், தூயதமிழையே பயன்படுத்துவோரிலிருந்து மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் மொத்தம் 38 பேருக்குத் தூயதமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது.
விருதுத்தொகை ரூ.20ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ்
6. தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு
நடைமுறை வாழ்க்கையிலும், பேச்சுவழக்கிலும் பிறமொழிக் கலப்பில்லாமல், தூயதமிழையே பயன்படுத்துவோரிலிருந்து மாநில அளவில் தேர்வுசெய்யப்படும் மூன்றுபேருக்குத் தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு வழங்கப்படும். இப்பரிசு 2019ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது.
பரிசுத்தொகை ரூ.5ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ்