Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க சாட்டிலைட் மூலம் கண்காணிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க சாட்டிலைன் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை புறநகரில் மொத்தம் 54 ஏரிகள் உள்ளன. இவற்றில் நெமிலிச்சேரி, சேலையூர், ராஜகீழ்ப்பாக்கம், இரும்புலியூர், தாம்பரம் பெரிய ஏரி, கடத்தேரி, மாடம்பாக்கம், மேடவாக்கம், சோளிங்கநல்லூர் உள்ளிட்ட பெரிய ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.

பல இடங்களில் குடிசைகள் அமைத்தும், சில இடங்களில், வீடுகளைக் கட்டி குடியேறியுள்ளனர். சென்னைக்கு நீர் ஆதாரமாக உள்ள புழல் ஏரியில் திருமுல்லைவாயில், சூரப்பட்டு, புதூர் பகுதிகளில் தனியார் ஆக்கிரமித்துள்ளனர். மாதவரம் ரெட்டேரியில் வினாயகபுரம், லட்சுமிபுரம், கொளத்தூர் பகுதிகளில் ஏரி இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ரெட்டேரியின் மற்றொரு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர், புழல், சைக்கிள் ஷாப் பகுதிகளிலும் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொரட்டூர், கொளத்தூர் ஏரிகளிலும் ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இதனால், ஏரியின் பரப்புளவு குறைந்து, தண்ணீர் தேக்கி வைக்கும் பகுதி ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. அடைபட்ட மழைநீர் கால்வாய்களையும் மீறி, ஏரிகளில் மழைநீர் தேங்கும் போது, ஆக்கிரமிப்பாளர்கள் ஏரிக்கரைகளை உடைத்து விடுகின்றனர். இப்படி வெளியேறும் மழைநீர், சுற்றுப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளக்காடாக மாற்றி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து, விரைவான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு இருக்கிறது.குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைசி பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லை பகுதிகள் ஆக்கிரமிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள் அதிகமாக ஆக்கிரமிப்புக்கு ஆளாகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன.

இருக்கும் நீர்நிலைகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நீர்நிலைகளை காக்க அரசு புதிய நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஒன்றிய அரசு இணையதளம் ஒன்றிய நீர்வள ஆணையம், இந்திய வானிலை மையம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து புதிதாக இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த இணையதளம் மூலம் மாநிலத்தின் நீர் தேவை, கிராமங்களில் தண்ணீர் வரவு-செலவு, குடிநீர் பற்றாக்குறை நிலவரம், அணைகளுக்கு நீர்வரத்து முன்னறிவிப்பு, நிலத்தடி நீர் தகவல், ஆறுகளுக்கு இடையே நீர் பரிமாற்றம் போன்ற தகவல்களை பார்க்க முடியும்.

இதேபோல, செயற்கைக்கோள் அடிப்படையிலான நீர்நிலைகளின் தகவல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பதற்கு ‘tnwip.tn.gov.in’என்ற இணையதள சேவை ரூ.2.55 கோடி ஒதுக்கி உருவாக்கி உள்ளது. இதன் மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவு இழப்பையும் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. நீர்நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல்களையும் அனுப்பி வைக்க முடியும். இந்த 2 இணையதள சேவைகளையும் முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் வாயிலாக புதிய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீரின் இருப்பு, தரம் ஆகியவற்றை அரசால் எளிதாக கண்காணிக்க முடியும்.

அத்துடன் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பையும் தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் முடியும். நீர்நிலைகள் புனரமைப்பு மேலும் நீர்நிலைகளை புனரமைக்க முன்கூட்டியே திட்டமிட முடியும். ஏரிகளில் நீர் இருப்பு மற்றும் நீர்பிடிப்பு பரப்பளவு ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து, ஆதாரபூர்வ முடிவெடுக்க முடியும் என்பதால், இத்திட்டம் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். மழை காலங்களில் அதிகாரிகளுக்கு தானாக எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பி விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.