Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

"செம்மொழியான தமிழ்மொழியாம்" எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

சென்னை: செம்மொழியான தமிழ்மொழியாம்" என்ற கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வரலாற்று அறிஞர்கள் தமிழின் பிறப்பை கி.மு. 4 ஆம் நூற்றாண்டு என்று தெரிவிக்கின்றனர். ஆனால், "கல்தோன்றி மண் தோன்றா காலத்தோடு முன் தோன்றி மூத்தகுடி" என்பது தமிழ் சான்றோர்களின் கருத்து. தமிழின் தொன்மையான படைப்புகளான தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களும், திருக்குறளும், சங்க இலக்கியங்களான அகநானுறு, புறநானுறு, ஐம்பெரும் காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் உள்ளிட்ட பல ஆயிரம் நூல்கள் தமிழ் உலகத்திற்கு அளித்திருக்கும் கொடையாகும். மேலும் செந்தமிழ் நவீன இலக்கியத்திலும் தனது தனித்த முத்திரை பதித்து வருகிறது.

கணினி யுகத்திலும் தமிழ்மொழி தனது ஆளுமையை செலுத்தி வருகிறது. மொழி வளமும் கவித்துவ அழகியலும் கொண்ட தமிழ் மொழிக்குப் பெருமைச் சேர்க்கும் வண்ணம் கலைஞர் 2004 ஆம் ஆண்டு செம்மொழி ஆங்கீகாரம் பெற்று தந்தார். கோவையில் செம்மொழி மாநாட்டையும் நடத்தினார். தமிழ் எழுத்தையும்- பேச்சையும் இறுதி வரை தனது மூச்சாக கொண்டு வாழ்ந்த தமிழ் கடல். தெற்கே உதித்த ஒளி குன்றாத சூரியன். உலகம் போற்றும் உன்னத அரசியல் தலைவர். தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டு ஆற்றியவர். பல நூல்களை எழுதியவர். இத்தகைய அவரின் பெரும் பணிகளையும் செம்மொழியான தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு செம்மொழி விருது வழங்கி வருகிறது.

கலைஞரின் பிறந்த நாளான ஜூன்- 3 ஆம் தேதியை செம்மொழி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.இத்தகைய செம்மொழிக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் விதமாகவும், முத்தமிழறிஞரின் பெரும் தமிழ் தொண்டை போற்றும் வகையிலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் "செம்மொழியான தமிழ்மொழியாம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன அதில், சொற்பொழிவுப் போட்டியில் 450 நபர்களும், கவிதைப் போட்டியில் 875 நபர்களும், வினாடி வினாப் போட்டியில் 1021 நபர்களும், அறநெறிக்கதைகள் போட்டியில் 1020 நபர்களும், என்னுள் இருக்கும் கலைஞர் போட்டியில் 920 நபர்களும், என ஆக மொத்தம் 4286 நபர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 34 நபர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அமைச்சர் சாமிநாதன் இன்று (01-08-2025) சென்னை கலைவாணர் அரங்கத்தில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்து அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்கள். இந்நிகழச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜராம், இ.ஆ.ப. கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) இரா.பாஸ்கரன், ஊடக ஒருங்கிணைப்பாளர் தி. செந்தில்வேல் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் மற்றும் ஊடக மைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.