பெரம்பூர்: நடைபாதையில் தூங்கிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி ஜீவா மேம்பாலம் அருகே உள்ள எம்.எம்.கார்டன் பகுதியில் கடந்த மாதம் 31ம் தேதி அதிகாலை 3 மணிக்கு, தலையில் பலத்த காயத்துடன் 50 வயது மதிக்கத்தக்க நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார், அந்த நபரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய பகுதியில் வசிக்கும் ஆசிப் (எ) கார்த்திக் (23) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் ஆசிப் தனது தாய், சகோதரி, சகோதரியின் 2 மகள்கள் என அனைவரும் ஜீவா ரயில் நிலைய நடைபாதையில் தங்கி, தினக்கூலி வேலை செய்து வருவதும், கடந்த 31ம் தேதி அதிகாலை அனைவரும் நடைபாதையில் படுத்திருந்தபோது, ஆசிப்பின் தங்கை மகளான 6 வயது சிறுமியிடம் 50 வயது மதிக்கத்தக்க நபர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். சிறுமி கூச்சலிட்டதால், ஆசிப் எழுந்து அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
ஆசிப்புடன் சேர்ந்து நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த வியாசர்பாடி சஞ்சய் நகர் 7வது தெருவை சேர்ந்த அலெக்ஸ் (27) என்பவரும் அவரை தாக்கியது தெரியவந்தது. ஏற்கனவே ஆசிப் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அலெக்சையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
இந்நிலையில் அடிபட்ட 50 வயது நபர் மருத்துவமனையில் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சுயநினைவு வராத காரணத்தினால் அவரது பெயர் முகவரி எதுவும் போலீசாருக்கு தெரியவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.