Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆப்பிள் நிறுவனம் ஆர்வம் ரூ.30,000 கோடியில் மின்னணு உதிரி பாக தொழிற்சாலை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

* 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு

* இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 41.2% பங்கு வகிக்கிறது

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.30,000 கோடியில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரி பாக தொழிற்சாலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழகம் ஏற்கனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவிக்கவும், குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்க்கவும், தமிழக அரசு, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கையை அறிமுகப்படுத்தியது.

இந்த கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ வழிவகுத்துள்ளது. மின்னணு துறை வளரச்சியில் நாட்டிலேயே தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. 14.6 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ஒன்றேகால் லட்சம் கோடி அளவுக்கு மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழகத்தில் நடந்துள்ளது. இதில், 100 பில்லியன் டாலர் இலக்கை அடைய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரி பாக தொழிற்சாலைகள் ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி: ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஆப்பிள் நிறுவனம் சார்ந்து இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்க தமிழ்நாடு முக்கிய மையமாக உருவெடுத்து வருகிறது. மாநிலத்தின் உயர்தர உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம் மற்றும் சிறப்பான நிர்வாகம் ஆகியவை ஆப்பிள் சப்ளையர்களை ஈர்க்கின்றன. இதற்காக, ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம், ஒன்றிய அரசின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்திற்கு இணையாக உள்ளது.

குறிப்பாக மாநில அளவிலான சலுகைகளை வழங்கி, முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. இந்தத் திட்டம் மூலம் 30,000 கோடி ரூபாய் முதலீடுகளையும், 60,000 புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவது இலக்காக உள்ளது. ஆப்பிள் மின்னணு நிறுவனத்தின் அமைப்பை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவது முதல் முன்னுரிமையாக இருந்தது. அது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இப்போது, ‘பிராண்ட் தமிழ்நாடு’ உலகளவில் பிரபலமாகி, ஆப்பிள் சப்ளையர்கள் எங்களைத் தேடி வருகின்றனர். இந்த மாநிலத்திற்கு இருக்கும் திறன்கள் குறித்து அவர்கள் அறிவார்கள். தமிழ்நாடு தனித்துவமான மாநிலம்.

உயர்தர உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம் மற்றும் சிறந்த நிர்வாகம் கொண்டு உள்ளதால், இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆப்பிளின் முக்கிய உலகளாவிய சப்ளையரான பாக்ஸ்கான், தமிழ்நாட்டில் ஐபோன்களை உற்பத்தி செய்து, முதன்மையாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. பாக்ஸ்கானுடன், பெகாட்ரான் (இப்போது டாடா எலக்ட்ரானிக்ஸ்), டாடா எலக்ட்ரானிக்ஸ், ஜேபில் (திருச்சியில் புதிய ஆலை), சால்காம்ப் (சார்ஜர்கள் மற்றும் உதிரிபாகங்கள்), கார்னிங் (ஸ்ரீபெரும்புதூரில் கொரில்லா கிளாஸ்), லிங்யி ஐடெக் (துல்லிய உதிரிபாகங்கள்) மற்றும் ஓஎன் செமிகண்டக்டர் ஆகியவை தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. இவை பெரும்பாலும் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம் பகுதி, ஒசூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ஆலை அமைத்து செயல்பட்டு வருகிறது. அதனால் அந்த பகுதிகள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் மாநில சலுகைகளால் ஆதரிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு, இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் 41.2 சதவீத பங்கு வகிக்கிறது. 2025ம் நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை பதிவு செய்துள்ளது. அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்டுவது இலக்காக உள்ளது. புதிய திட்டம் மூலம், கேமரா/டிஸ்ப்ளே மாட்யூல்கள், சென்சார்கள், எச்டிஐ/பிளெக்ஸி பிசிபிகள், லி-ஐயன் செல்கள், எஸ்எம்டி பாசிவ் சாதனம் போன்ற உயர் மதிப்பு உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய மாநிலம் திட்டமிடுகிறது.

தமிழ்நாடு மின்னணு துறையில் முன்னணியில் உள்ளது. இது மேலும் விரிவாக்கப்பட்டு வருகிறது. ஜப்பான் பயணத்திலிருந்து திரும்பியுள்ளேன், மேலும் முக்கிய உதிரிபாகங்கள் உற்பத்திக்கு நிறுவனங்கள் வரவுள்ளன. மின்னணு துறையில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இது சம வாய்ப்பு மற்றும் அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை உறுதி செய்கிறது. முதலீடுகளை அளவால் மட்டுமல்ல, தரத்தாலும் மதிப்பிடுகிறோம். ஒரு உதிரிபாகத்திற்கான 100 கோடி ரூபாய் முதலீடு, உள்ளூர் சுற்றுச்சூழலை உயர்த்தினால், அது ரூ.10,000 கோடி பொதுவான முதலீட்டை விட முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.